64 வினாடிகளில் கோல்; துருக்கியை வீழ்த்தி பராகுவே வெற்றி
- Surendran Sumdraraj
- 20 Jun, 2026
சாண்டா கிளாரா, ஜூன் 20 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் டி’ பிரிவு ஆட்டத்தில் பராகுவே அணி துருக்கியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முக்கியமான வெற்றியைப் பதிவு செய்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாண்டா கிளாராவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பராகுவே நடுகள வீரர் மத்தியாஸ் கலார்சா போட்டி தொடங்கிய வெறும் 64 வினாடிகளிலேயே கோல் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
போட்டியின் ஆரம்பத்திலேயே கிடைத்த அந்த கோல், இறுதிவரை வெற்றிக் கோலாக அமைந்தது. அதன்பின்னர் துருக்கி சமநிலை கோலைத் தேடி பல்வேறு தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பராகுவே தற்காப்பு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு முன்னிலையைப் பாதுகாத்தனர்.
இந்த ஆட்டத்தில் மற்றொரு பரபரப்பான சம்பவமும் அரங்கேறியது. பராகுவே அணியின் நட்சத்திர வீரர் மிகுவேல் அல்மிரோன், முதல் பாதி கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். துருக்கி வீரருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவரது வாயை மூடிய செயல் நடுவரால் ஒழுங்கீனமாக கருதப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் மூலம் உலகக் கோப்பை 2026 தொடரில் சிவப்பு அட்டை பெற்ற முதல் வீரர் என்ற பதிவையும் அல்மிரோன் உருவாக்கியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



