மலாய்காரர் அல்லாதவர்களே தீர்மானிக்கும் சக்திகள்! - முகமட் ஹசான்

top-news

கோலாலம்பூர், செப் 10: அம்னோ (Umno) என்பது மலாய்க்காரர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களுக்கும் உரிய ஒரு நடுநிலைமையான கட்சி என்று அக்கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற அம்னோ இளைஞர் பிரிவு, வனிதா பிரிவு மற்றும் புத்ரி  பிரிவு ஆகியவற்றின் பொதுக்கூட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய முகமட், கூட்டரசு அரசியலமைப்புக்கு இணங்க, நாடு அனைவருக்கும் உரிய தாயகமாகவும், செழிப்பானதாகவும், கவனமாக நிர்வகிக்கப்படுவதாகவும் இருப்பதை உறுதி செய்வோம் என்று கூறினார்.

அம்னோவின் ஆதரவாளர்கள் மலாய்க்காரர்கள் மட்டுமே என்று நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது. மலாய்க்காரர் அல்லாதவர்கள் மற்றும் சபா, சரவாக் மாநிலங்களில் உள்ள நமது நண்பர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தும் வகையில் நமது செயல்களோ அல்லது நடத்தையோ ஒருபோதும் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

'தோக் மாட்' (Tok Mat) என்று பரவலாக அறியப்படும் முகமது, மலேசிய அரசியலில் நிலவும் குழப்பமான சூழலில் அரசாங்கத்தை அமைக்க மலாய்க்காரர் அல்லாதவர்கள் மற்றும் சபா, சரவாக் மாநிலக் கட்சிகளின் நம்பிக்கை அம்னோவுக்குத் தேவை என்பதைப் பிரதிநிதிகளுக்கு நினைவூட்டினார்.

அவர்கள் இப்போது தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளனர். அவர்களை வெறும் 'நிலையான வாக்கு வங்கியாக' (fixed deposits) நாம் கருதிய காலம் கடந்த காலத்து விஷயமாகிவிட்டது  என்று அவர் கூறினார்.

மலாய்-முஸ்லிம் அரசியலின் ஆதிக்கம் காரணமாக நாட்டின் போக்கு குறித்து மலாய்க்காரர் அல்லாதவர்கள் வெளிப்படுத்திய கவலைகளைக் குறிப்பிட்ட முகமட், அம்னோ எப்போதும் ஒரு நடுநிலையான கட்சியாகவே இருந்து வருகிறது என்று கூறினார்.

அம்னோ எப்போதும் நடுநிலையான பாதையையே பின்பற்றும். நாங்கள் இடது அல்லது வலது பக்கம் சாயமாட்டோம். ஒரு மிதமான தேசியக் கட்சியாக, இடது மற்றும் வலதுபுறக் கருத்துகளுக்கு இடையே சமநிலையைப் பேணுவதே எங்கள் உறுதிப்பாடு என்று அவர் கூறினார்.

அம்னோவுடன் இணைய விரும்பும் கூட்டணிக் கட்சிகள், பழமைவாத அல்லது தீவிர கொள்கைகளை அக்கட்சியின் மீது திணிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் முகமது எச்சரித்தார்.

பல தசாப்தங்களாக, மிதமான மனப்பான்மை, கொள்கைகள், நிலைப்பாடுகள் மற்றும் முன்னுரிமைகளுடன் நாங்கள் நாட்டை நிர்வகித்து வந்துள்ளோம். எனவே, அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்பும் எவரும், அம்னோவின் மிதமான மற்றும் நடுநிலையான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *