புக்கிட் அமான் போலீஸ் அதிரடி சோதனை! 90 லட்சம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

(இரா. கோபி)

 கோலாலம்பூர், ஜூலை 11- புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை கோலாலம்பூரில் 2 இடங்களில் சோதனை மேற்கொண்டதாக  அதன் இயக்குநர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்தார்.

இம்மாதம் 10ஆம் தேதி நண்பகல் 2.40 மணியளவில் டேசா பெட்டாலிங்கில் ஒரு மலாய் ஆடவரை கைது செய்து அவர் காரிலிருந்து 120 பெட்டாலங்களில் ஷாபு வகை போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் எடை 126.18 கிலோ கிராம் ஆகும் என்று அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக சீன ஆடவரும் மலாய் ஆடவரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் மதிப்பு 40 லட்சம் வெள்ளியாகும். இந்த போதைப்பொருள் கிட்டத்தட்ட 630.910 போதைப் பித்தர்கள் உபயோகிக்கக்கூடியது என்று தெரிவித்த அவர், கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


மற்றொரு சோதனையில் கோலாலம்பூர் போதைப் பொருள் குற்றப் பிரிவு இம்மாதம் 10ஆம் தேதி நண்பகல் 2 மணியளவில் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். செராஸ் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நிறுத்தும் இடத்தில் சோதனை செய்யப்பட்டது. மற்றொன்று ஸ்ரீகொம்பாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த சோதனையில் 2 சீன ஆடவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் போதைப் பொருள் வைத்திருக்கும் 2 கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிடங்கில் இருந்து 50 லட்சத்து  22ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

அந்தக் கிடங்கில் MDMA எனும் போதைப் பொருள் 165 கிலோ கிராம் கொத்தமின் 9 கிலோ கிராம், ஏராமேன் 5 மாத்திரை 4.5 கிலோ கிராம், மிட்டாய் போல் பாக்கேட்டில் அடைத்திருந்த 3.5 கிலோ கிராம், கொக்கின் எனும் போதைப்பொருள் 1.6 கிலோ கிராம், மற்றும் ஷாபு 485 கிராம் என்று அவர் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் கிட்டத்தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உபயோகிக்கக் கூடியது என்று அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணைக்காக 7 நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2 சோதனை நடவடிக்கையிலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு மொத்தம் 90 லட்சத்து 5 ஆயிரம் வெள்ளி என்று டத்தோ காவ் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *