கருங்கடலில் இந்திய சிப்பந்திகள் சென்ற எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்
- Surendran Sumdraraj
- 07 Oct, 2026
மாஸ்கோ, அக். 7: கருங்கடல் பகுதியில் 23 இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் சோச்சி கடற்கரை அருகே சென்றுகொண்டிருந்த லைபீரியா நாட்டுக் கொடியுடன் கூடிய ‘அஃப்ராமேக்ஸ் ரியோ’ என்ற எண்ணெய் கப்பல் இந்த தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படுகிறது.
இந்த டிரோன் தாக்குதல் உக்ரைன் தரப்பினரால் நடத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் தீப்பிடித்து எரியத் தொடங்கியதுடன், கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த கப்பலில் பணியாற்றிய 23 இந்திய சிப்பந்திகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீயின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கப்பலை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சோச்சி கடற்கரையிலிருந்து பார்த்தபோது, கப்பலில் இருந்து பெரிய அளவில் தீப்பிழம்புகளும் அடர்த்தியான கரும்புகையும் வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

