இறப்புச் சடங்கு உதவித் திட்டத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் – டாக்டர் குணராஜ் ஜார்ஜ் வலியுறுத்தல்
- Shan Siva
- 21 Oct, 2026
கிள்ளான், அக் 21: மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, இந்திய பி40 குடும்பங்களுக்கு வழங்கப்படும் 1,500 ரிங்கிட் இறப்புச் சடங்கு உதவித் திட்டத்திற்கான விண்ணப்பக் காலத்தை, வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான
நிதி ஒதுக்கீடு முழுமையடைந்துவிட்டதாகக் கூறி, அக்டோபர் மாதத்திலேயே விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இறப்புச்
சம்பவங்கள் ஒன்றும் தற்காலிகமானது அல்ல. அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டு
அட்டவணைக்கு ஏற்ப மரணங்கள் நிகழ்வதில்லை என்று குறிப்பிட்ட அவர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்
குடும்ப உறுப்பினர்களை இழக்கும் இந்திய பி40 குடும்பங்களும் இந்த உதவியைப் பெறுவதற்கான வாய்ப்பு
வழங்கப்பட வேண்டும் என்றார்.
அன்புக்குரியவர்களை
இழக்கும் குடும்பங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் உடலை அடக்கம்
செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை உடனடியாக எதிர்கொள்ள
வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சூழலில், 1,500 ரிங்கிட் உதவித் தொகை என்பது வெறும்
நிதியுதவி மட்டுமல்ல என்றும், துயரத்தில்
இருக்கும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க உதவும் முக்கிய ஆதரவு
என்றும் அவர் தெரிவித்தார்.
விண்ணப்பங்கள்
முன்கூட்டியே நிறுத்தப்படுவதால், தகுதி இருந்தும்
விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட டாக்டர்
குணராஜ், குறிப்பாக விண்ணப்பக் காலம் முடிவடைந்த
பின்னர் குடும்ப உறுப்பினர்களை இழப்பவர்களுக்கு இது அநீதியை ஏற்படுத்தக்கூடும்
என்றார்.
எனவே, மித்ரா இந்த உதவித் திட்டத்திற்கான
விண்ணப்பக் காலத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை
நீட்டிக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப
தற்போதைய நிதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்து, தேவைப்பட்டால் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.
மேலும், இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்களின்
எண்ணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள், எஞ்சியுள்ள நிதி ஒதுக்கீடு மற்றும் உதவி
பெற்றவர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை மித்ரா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், விண்ணப்பங்கள் முன்கூட்டியே
நிறுத்தப்பட்டதால் உதவியைப் பெறத் தவறிய தகுதியுள்ள குடும்பங்களுக்கு, மேல்முறையீடு செய்வதற்கான தெளிவான
வழிமுறைகளையும் சிறப்பு ஏற்பாடுகளையும் உருவாக்க வேண்டும் என்று அவர்
கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தில்
அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளைப் புறக்கணிக்க வேண்டும்
என்பது தமது நோக்கமல்ல என்று தெரிவித்த டாக்டர் குணராஜ், உதவித் திட்டம் நியாயமான முறையிலும்
வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதே தமது கோரிக்கையின்
நோக்கம் என்றார்.
தற்போதைய நிதி
ஒதுக்கீடு முழுமையடைந்திருந்தால், தகுதியுள்ள
குடும்பங்களுக்கான வாய்ப்பை மூடுவதற்குப் பதிலாக, கூடுதல் நிதியை ஒதுக்குவது அல்லது மாற்று உதவி ஏற்பாடுகளை
உருவாக்குவது குறித்து மித்ரா பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மித்ரா உடனடியாக இது
தொடர்பாக நடவடிக்கை எடுத்து, இறப்புச் சடங்கு
உதவித் திட்டத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை
நீட்டிப்பதுடன், தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கி, தகுதியுள்ள அனைத்து இந்திய பி40 குடும்பங்களுக்கும் 1,500 ரிங்கிட் உதவியைப் பெறுவதற்கான நியாயமான
வாய்ப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

