'எங்க ஊரு பாட்டுக்காரன்'! - இசைத்தென்றல் இரகுராமனின் முதலாமாண்டு நினைவேந்தல்!

top-news
FREE WEBSITE AD

பிரிக்ஃபீல்ட்ஸ்,  ஆக 17: நாடெங்கும் தன் வசியக் குரலால் ரசிகர்களைத் தன்வசமாக்கி வைத்திருந்த மாபெரும் கலைஞர்  இராகுராமன் அவர்களுக்கான  முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று பிரிக்பீல்ட்ஸ் பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இயல் இசை நாடக மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இசைத்தென்றல் இரகுராமன் அவர்களின் நினைவலைகளை மிக நேர்த்தியாக காணொளிகளாய் உருவாக்கி அனைவரையும் உருகச் செய்தனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

இந்நிகழ்ச்சிக்கு இசைத்தென்றல் இராகுராமனின் பாசத்திற்குரிய அபிமானி அறப்பணி வேந்தர் ஓம்ஸ் ப. தியாகராஜன் தலைமை ஏற்றார். 


மேலும் இரகுராமனின் சகோதரரும், எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தவருமான மோகனதாஸ் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு இரகுராமன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இரகுராமன் அவர்களின் புகைப்படத்திற்கு அனைவரும் புஷ்பாஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சி நெறியாளராக இயல் இசை நாடக மன்றத்தின் இளவரசு நெடுமாறன் அவ்வப்போது இரகுராமன் பற்றிய சுவாரஸ்ய குறிப்புகளைத் தந்தது வித்தியாசமாக அமைந்ததோடு, மனதை நெகிழச் செய்தது.

வந்திருந்தவர்கள் அனைவருமே இரகுராமனின் ஆத்மார்த்த ரசிகர்கள் என்பதால். நினைவேந்தல் நிகழ்வின் உன்னதம் உணர்ந்து தங்கள் பங்களிப்பிற்கு கண்ணியம் சேர்த்தனர்.

பார்வையற்றோரும் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது உருக்கமாய் இருந்தது.

சிற்றுண்டியோடு தொடங்கிய நிகழ்வு இரகுராமன் குறித்த நினைவுகளால் மனதை நிறைத்து, அந்த மாமனிதரின் மகத்துவத்தை உணரச் செய்தது.

பார்வையற்றவர் என்ற போதிலும் தன் உச்சரிப்பில் சொற்களுக்கு உயிரூட்டி இசையூட்டி அழகு காட்டிய இந்த இசைமகன் தமிழ் மட்டுமல்லாது மலாய், சீனம், ஆங்கில மொழிகளிலும் தன் இசை நுட்பத்தைப் புகுத்தி பல்லின மக்களையும் தன் பாட்டுப் பாதைக்குள் பயணிக்க வைத்தவர்.

தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் இசைக்கும் முழுமையாக அர்ப்பணித்து மறைந்த அந்த மாபெரும் கலைஞருக்கு இயல் இசை நாடக மன்றத்தின் இந்த அன்பாஞ்சலிகள், அன்பின் சங்கமத்தில் நிறைவாய் அமைந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *