கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா!

top-news

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். அதோடு, லிபரல் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.

பிரதமராக பத்து ஆண்டுகள் இருந்த நிலையில், தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உள்நாட்டு அரசியல் சிக்கல்களால் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். இருப்பினும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் நீடிப்பார். இந்த அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பில் ஜஸ்டீன் ட்ரூடோ கூறினார்.

அப்போது அவர் பேசுகையில், "நான் ஒரு போராளி. கனடா மக்கள் மீது நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். கனடா மக்களுக்கு எது சிறந்ததோ அதையே செய்வேன். விடுமுறை நாட்களில் எங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க எனது குடும்பத்தினருடன் நீண்ட நேரம் உரையாடினேன். உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் முடிவைப் பற்றி நேற்று இரவு என் குழந்தைகளிடம் கூறினேன்.

நான் கட்சி தலைவர் மற்றும் கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். கனடா மக்கள் அடுத்த தேர்தலில் உண்மையான தேர்வுக்கு தகுதியானவர்கள். அந்தத் தேர்தலுக்கு நான் சிறந்த தேர்வாக இருக்க முடியாது. மார்ச் 24 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கிறேன்" என்றார். மேலும் அவர் தனது உரையில், கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்கள் செயல்பாடுகளை வெகுவாக பாதித்துள்ளதாகவும், கட்சிக்கும் நாட்டிற்கும் புதிய ஆற்றலையும் தலைமைத்துவத்தையும் வழங்க இதுவே சரியான தருணம் என கருதுவதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், ட்ரூடோ கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான பியர் பொய்லிவ்ரே குறித்தும் கருத்து தெரிவித்தார். பொய்லிவ்ரே கனடாவை வழிநடத்த சரியான நபர் அல்ல என்றும், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்த அவரது கருத்துக்கள் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், நாட்டிற்காகவும், கட்சிக்காகவும் எப்போதும் இருப்பேன் என்றும், ஆனால் இப்போது கட்சி புதிய திசையில் செல்ல புதிய தலைவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புவதாகவும் கூறினார்.. சர்வதேச அரங்கில் பிரச்னைகளை சந்தித்த ட்ரூடோவுக்கு, உட்கட்சியில் எதிர்ப்புகள் இருந்தன. வரி தொடர்பான கருத்து மோதலால் நிதி அமைச்சர் ராஜினாமா செய்ததை அடுத்து, அவரது கட்சிக்குள்ளேயே ட்ரூடோ பதவி விலக என்று கோரிக்கை எழுந்தது. இப்படியான சூழலில், ஜஸ்டீன் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *