உத்தரபிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 24 தொழிலாளர்கள் படுகாயம்
- Surendran Sumdraraj
- 01 Sep, 2026
லக்னோ, ஆக. 31 –
உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 24 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். மேலும் 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள பிப்ரி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆலையின் ஒரு பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடிப்பின் தாக்கத்தால் ஆலையின் கட்டிடப் பகுதிகள் சேதமடைந்ததுடன், அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் இதுவரை 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 15 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



