இனி துளியும் சகித்துக்கொள்ளமாட்டேன்! -அன்வார்

top-news

மலாக்கா, செப் 21: மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக இனப் பிரச்சினைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று அரசியல் கட்சிகளைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் மீண்டும் எச்சரித்துள்ளார். 

அரசியல் சூழல் தங்களுக்கு எதிராக அமையும்போது அல்லது இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும்போதுதான் கட்சிகள் பெரும்பாலும் இத்தகைய உத்திகளைக் கையாளுகின்றன என்று அவர் கூறினார்.

நேற்று இரவு நடைபெற்ற மலேசிய சீன கலாச்சார விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அரசியல் சூழல் சிக்கலானதாகவும் மோதல் நிறைந்ததாகவும் மாறும்போது, ​​கட்சிகள் ஆதரவை விலக்கிக்கொண்டு இனவாத அரசியலை முன்னெடுக்கின்றன. இக்கட்டான சூழலில் அவை மீண்டும் இன விவகாரங்களையே பயன்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.

இனப் பிரச்சினைகள் இனி எந்தவொரு சமூகத்தின் முதன்மை கவனமாகவும் இருக்கக்கூடாது என்று கூறிய அன்வார், நாடு சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 70 ஆண்டுகளை நெருங்கும் வேளையில், நாட்டை யார் வழிநடத்தினாலும், பன்முகத்தன்மை கொண்ட சமூகங்களின் கூட்டு வலிமையால் செழித்தோங்கும் ஒரு நாடாக மலேசியா உருவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நமது வாழ்வுரிமைக்கு ஒவ்வொரு குரலும் முக்கியமானது. முடிவில்லாத வாதங்களும் மோதல்களும் நமக்கு இன்னும் போதாதா? என்று அவர் வினவினார்.

ஒன்றிணைந்த நாடாக மலேசியாவின் எதிர்கால வாழ்வுரிமை மீதே ஒவ்வொரு குரலும் இப்போது கவனம் செலுத்த வேண்டும். யாருக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டாலும், யார் ஆதரிக்கப்பட்டாலும், அவர்கள் மக்களைப் பாதுகாக்கவும், நாட்டைப் பேணிக்காக்கவும், ஒரே தேசமாக நமது குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உறுதியளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றில் அரசாங்கம் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது என்றும், அவற்றை முற்றிலுமாக ஒழிக்கப் பாடுபடும் என்றும் அன்வார் மீண்டும் வலியுறுத்தினார். 

இதில் துளியும் சகிப்புத்தன்மை காட்டமாட்டோம் என்று கூறிய அவர், நாட்டிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை தாம் தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாக அவர் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *