உக்ரைன் ராணுவ மந்திரி பதவி நீக்கம்: காரணங்களை விளக்கிய ஜெலன்ஸ்கி
- Surendran Sumdraraj
- 24 Aug, 2026
கீவ்: உக்ரைன் ராணுவ மந்திரியாக இருந்த மைக்கேலோ பெடோரோவ் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணங்களை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தற்போது விளக்கியுள்ளார்.
கீவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜெலன்ஸ்கி, போர் நீடித்து வரும் சூழலில் தேர்தலை நடத்த வேண்டும் என பெடோரோவ் வலியுறுத்தியதாகக் கூறினார். இது அவரது பதவி நீக்கத்துக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரஷியப் பகுதிகளில் ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒப்புதல் வழங்கியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தமக்கு தகவல் அளித்ததாக ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார். அந்தத் தகவலை நம்பி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் இதுகுறித்து பேசியதாகவும் தெரிவித்தார்.
ஆனால், பின்னர் எலான் மஸ்க்கிடம் நேரடியாக விசாரித்தபோது, அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என அவர் மறுத்ததாக ஜெலன்ஸ்கி கூறினார். இதனால் டிரம்புடன் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாதுகாப்புத் துறைக்கான நிதி முன்கூட்டியே அதிகளவில் செலவிடப்பட்டதால், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான செலவுகளில் சுமார் 2,700 கோடி அமெரிக்க டாலர் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்த காரணங்களின் அடிப்படையிலேயே பெடோரோவை ராணுவ மந்திரி பதவியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



