முத்தமிழைப் போற்றும் விதத்தில் பாரதி இலக்கியத் திருவிழாவின் கரிகாற்சோழன் வரலாற்று இலக்கிய மேடை நாடகம்!

top-news
FREE WEBSITE AD

பாரதி இலக்கியத் திருவிழாவின் மற்றொரு நோக்கமானது தமிழர் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதாகும்.

அந்த வகையில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழைப் போற்றும் விதமாக இம்முறை தமிழர் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட 'கரிகாற்சோழன்' நாடகம் 16/9/2024 அன்று நடத்தப்பட்டது. பாரதி இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு, தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் பேராதரவில் மலேசியத் தமிழர் கலை மன்றத்தினர் படைக்கும் 'கரிகாற்சோழன் வரலாற்று இலக்கிய மேடை நாடகம் அன்றைய தினம் மாலை 6.30 தொடங்கி இரவு 10.00 மணி வரை மிக விமரிசையாக அரங்கேற்றம் கண்டது.





இம்மேடை நாடகத்திற்குத் தலைமை தாங்குவதற்காக தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் டத்தோ பா.சகாதேவனின் பிரதிநிதியாகவும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி, கலை, இலக்கிய, பண்பாட்டு அறவாரியத்தின் நிர்வாகச் செயலாளருமான ஐயா கரு.பன்னீர்செல்வம் சிறப்பு வருகை புரிந்தார். அவருக்குத் துணையாக, தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க இயக்குநர்களில் ஒருவரான இரா.பெரியசாமி கலந்து சிறப்பித்தார். 'கரிகாற்சோழன்' வரலாற்று மேடை நாடகத்தைக் கண்டுகளிப்பதற்காக வடப் பகுதியைச் சார்ந்த ஐந்நூற்றுக்கும் அதிகமான பொதுமக்களோடு தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் பேராளர்களும் உறுப்பினர்களும் அரங்கம் நிரம்பக் கலந்து கொண்டனர்.

'சோழ நாடு சோறுடைத்தது' எனும் சொலவடை மூலம் கரிகாற்சோழன். ஆட்சியில் நாடு வளம் பெற்றது; வயல்கள் செழித்தன; படைபலம் பெருகியது. அதேவேளை பிற மன்னர்களின் பயமும் பொறாமையும் கூடவே பெருகின. எல்லா எதிர்ப்புகளையும் போரில் முறியடித்தான் கரிகாலன். மாரிக் காலத்தில் ஆற்றின் வெள்ளத்தால் மக்கள் அவதியுறுவதையும் பயிர்கள் அழிவதையும் காக்கும் பொருட்டு கல்லணை கட்டும் கரிகாலன் வரலாற்றை மலேசியத் தமிழர் கலை மன்றத்தின் கலைஞர்கள் சிறப்பாக வெளிப்படுத்தினர்.





நிகழ்ச்சியின் இறுதியில் மூத்த கலைஞர்களுக்கு மக்களின் பலத்த கரவொலியுடன் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இம்மேடை நாடகத்தைச் சிறப்பு விருந்தினரான கரு.பன்னீர்செல்வம் அதிகாரப் பூர்வமாக சிறப்புரையாற்றி முடித்து வைத்தார். நிகழ்ச்சியில் நிறைவாக பிரம்மவித்யாரணயத்தின் சார்பாக தவத்திரு சுவாமி பிரம்மானாந்த சரஸ்வதி கலைஞர்களுக்கு நன்றிகூறும் வகையில் வாழ்த்தியதோடு கலைஞர்களையும் கலையையும் வாழ்விக்கு பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது என்றும் உணர்த்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *