ஓம்ஸ் எனும் அன்பின் சகாப்தம்!

- Shan Siva
- 18 Nov, 2024
தீபத்தின் சுடரைச் சின்னமாகக் கொண்டு ஓம்ஸ் எனும் சாம்ராஜ்யத்தை நிறுவி, தனி மனிதராய் உழைத்து, முன்னேறி, தன் உழைப்பின் வெகுமதியைச் சுயமாக அனுபவிக்காமல், தன் குடும்பம் தன் உறவு என்று இல்லாமல், திரும்பிய திசைகள் எங்கும் வாரி வழங்கி தன் சேவையால் ஒளிரும் மாமனிதர் ஓம்ஸ் தியாகராஜன் அவர்களின் 70-ஆவது பிறந்த நாள் விழா ‘ஓம்ஸ் எனும் அன்பின் சகாப்தம்’ எனும் பெருவிழாவாக, ஷா ஆலம், டபுள் ட்ரீஹோட்டலில் சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியம் மற்றும் ‘தமிழ் மலர்’ குழுமத் தலைவருமான ஓம்ஸ் தியாகராஜனின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள், ஓம்ஸ் குழுமத்தினர் உட்பட ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
ஒளிரும் தீபத்தை ஊதி அணைத்து, அனிச்சல் பகிரும் கலாச்சாரம் ஐயாவுக்கு உடன்பாடில்லை என்பதால், தமிழ் வாழ்த்து ஒலிக்க, அன்பின் ஒளியில் வெளிச்சமானது விழா.
நிகழ்வில் பிரதான அங்கமாக ‘தமிழ் மலர்’ ஊடகத்தின் புதிய அத்தியாயமாய் ‘தமிழ் மலர்’ செயலி மற்றும் ‘தமிழ் மலர்’ இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை ஓம்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவரும், ‘மலர் டிவி’யின் நிர்வாக இயக்குநருமாகிய டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
செயலி குறித்த விளக்கத்தை அதன் வடிவமைப்பாளரும் மென்பொருள் பொறியியலாளருமான ஸ்ரீ மூர்த்தி வழங்கினார்.
எந்த இனமும் இதைச் செய்யவில்லை!
நிகழ்வில் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை துணை அமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன், டத்தோ கு,பத்பநாபனால் அறிமுகப்படுத்தப்பட்ட மாபெரும் சமுதாயச் சேவகர் ஓம்ஸ் தியாகராஜன் என்று குறிப்பிட்டார். வாழ்க்கையில் சிரமப்படுகிறவர்கள், இல்லாதவர்களுக்கு அன்பைச் செலுத்துவதில்தான் நாம் இறைவனைக் காண முடியும். அந்த அளவிற்கு ஏழை எளியவர்கள் மட்டுமல்லாது எல்லா நிலையில் உள்ளவர்களுக்கும் உதவிகள் புரிந்து வருகிறார். மக்களின் துயரங்களைக் கேள்விப்படுகிற பொழுதெல்லாம் அதற்கு உதவி புரிகிற நல்ல மனம் கொண்டவராக ஓம்ஸ் திகழ்கிறார். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ராஜன் அவர்களைத் தெரியும். நான் அறிந்த வகையில் பல்வேறு சேவைகளை அவர் வழங்கி வந்தாலும், கல்விக்காக அவர் ஆற்றும் சேவை அளப்பரியது. தனி ஒருவனாய் தமிழ்ப்பள்ளிகளுக்காக, தமிழ்க் கல்விக்காக இன்று நேற்று நாளையும் என வற்றாது உதவிகளைச் செய்து வருகிறார். பணம் இருப்பவரிடம் மனம் இல்லை. மனம் இருப்பவரிடம் பணம் இல்லை. ஆனால், இந்த இரண்டும் வாய்க்கப்பெற்றவராக ஓம்ஸ் தியாகராஜன் இருக்கிறார். கல்வியின் முககியத்துவத்தைக் கருதி கல்விக்காக அதிக நல்லுதவிகளை வழங்கி வரும் ஓம்ஸ், 10 ஆண்டுகளாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்து வருகிறார். எந்த இனமும் பல்கலைக்கழகத்தில் அத்தகைய உதவியைச் செய்யவில்லை. செல்வ வளங்கள் குவிந்து கிடக்கின்றன. அதைத் தானும் தன் குடும்பமும் மட்டும் அனுபவிக்காது தன் சமுதாயம், தன் மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தன் செல்வங்களை வழங்கி வருகிறார். அவர் வாழ்வாங்கு வாழவேண்டும்” என்று கூறினார்.
நான் செய்த தவறு!
நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன், “ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் வாழ்த்துகளைக் கூறுவதற்குப் பல நல்ல உள்ளங்கள் வருவார்கள். அவர்களின் முதல் இடத்தைப் பிடிப்பவர் டான்ஸ்ரீ குமரன் அவர்கள் என்று கூறினார். மேலும், இதற்குமுன் சரஸ்வதி கந்தசாமியாக வந்தவர் இப்போது, செனட்டர் மற்றும் துணை அமைச்சராக வந்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுகள், அவருக்கு நியமனம் வழங்கிய பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மறு பிறவி என்று ஒன்று இருந்தால், டான்ஸ்ரீ குமரன் அரசியல்வாதியாகப் பிறக்காமல், தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப் பிறக்க வேண்டும் என்று அவர் வர்ணித்தார்.