எட்டு வயதில் ஒரு குட்டி எழுத்தாளர்! ஒவ்வொரு வார்த்தையிலும் வாசிப்பின் வாசம்!
- Shan Siva
- 19 Aug, 2024
ஆயுஷி
நாளைய உலகம் கொண்டாடப் போகும் மலேசியாவின் வீரியம் மிக்க விதை...
எட்டு வயதில் ஒரு குட்டி எழுத்தாளர்.
இந்தச் சின்ன வயதிலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து, அடங்காப் புத்தகப் பசியோடு இன்னும் நூல்களையும், நூலகங்களையும் தேடி அலையும் இவர், தன் சொந்தக் கற்பனையில் நான்கு புத்தகங்களை எழுதி, அமேசான் வரைக்கும் கால்பதித்திருக்கிறார்
மலேசிய சாதனை புத்தகம் உட்பட பல முக்கிய அங்கீகாரங்கள் இவரின் சாதனைகளின் சான்றுகளாய் தொடர்கின்றன.
இந்தக் குட்டிப் பூவின் ஒவ்வொரு வார்த்தையிலும் வாசிப்பின் வாசம் தெரிகிறது.
சுட்டித்தனம் செய்யும் வயதில் கெட்டிக்காரியாய் உலகளந்து பேசும் இவரது பேச்சு வியக்க வைக்கிறது...
வாசிப்பு என்ன செய்யும் என்பதற்கான விடையாய்
நடமாடும் ஆச்சரியக்குறியாய். .
மழலை மாறும் முன்பே மனித மேதையாய் மாறிவிட்ட யோகேஸ்வரன் - தேவகி தம்பதியரின் செல்ல மகளான ஆயுஷி, தற்போது கிள்ளான், SJKT தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஞான ஒளி!
தனது ஆறாவது வயதில் தனது முதல் புத்தகத்தை எழுதத் தொடங்கிய ஆயுஷி, 8 வயதுக்குள் நான்கு புத்தகங்களை எழுதி முடித்துவிட்டார்.
முழுக்க முழுக்க தனது கற்பனையில் உருவான கதையை தானே எழுதி இச்சாதனையைப் புரிந்துள்ளார். வாசிப்பின் மீது இவருக்கு இருக்கும் தீராப்பற்று, இன்று இத்தனைச் சிறுவயதிலேயே இவரை ஓர் எழுத்தாளராய் உருவாக்கியிருக்கிறது.
எழுத்து என்று மட்டுமல்லமால ஓவியம், பேச்சு, பூமியின் மீதான இவரின் அக்கறை என ஒவ்வொன்றிலும் வாசிப்பின் வெளிச்சம் ஞான ஒளியாய் பிரகாசம் காட்டுகிறது.
ஐந்து வயதில் நூலகத்தில் நுழைந்த இவர், ஒரு வருடத்திற்குள் 1660 புத்தகங்களை வாசித்து சாதனை படைத்ததில் நூலகத் தரப்பும் வியந்து பாராட்டியிருக்கிறது.
தெளிவு மிகுந்த பெற்றோரின் உன்னத அர்ப்பணிப்பில், அவர்களின் வழிகாட்டலில் இன்று எட்டு வயதிலும் எட்டாத உயரத்தைத் தொட்டிருக்கிறார்.
அறிவுத் தேன்!
குழந்தையை வாசிப்பின் பக்கம் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அதற்கான அத்தனை வசதிகளையும் குழந்தைக்கு செய்து கொடுத்து, புத்தகங்களை சிநேகமாக்கியிருக்கின்றனர் பெற்றோர்.
தன் மகள் புத்தகங்களைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவே ஷா ஆலம் நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் பழக்கத்தை ஊட்டியிருக்கின்றனர் . இத்தனை புத்தகங்களா? என நூலகத்தின் புத்தக கூட்டத்தைப் பார்த்து விழி விரித்த இந்தப் பட்டாம்பூச்சி... ஆசை ஆசையாய் அறிவுத் தேனை ருசிக்கப் பழகியது. அதன் பிறகு அதன் வானம் விரிந்தது. எல்லைகள் பெரிதானது.
இவரின் புத்தகப் பசியைப் போக்குவதற்காகவே தாத்தா பாட்டி உட்பட 6 பேர் நூலகத்தின் உறுப்பினர்களாக மாறி, ஆளுக்கு 10 புத்தகம் என மாதம் 60 புத்தகங்களை நூலகத்திலிருந்து அள்ளி எடுத்து வந்து கொடுத்துள்ளனர். எல்லாப் புத்தகங்களையும் ஆசை ஆசையாய் வாசித்தார். வாசிக்க வாசிக்க வளமாகியிருக்கிறது இவரது சிந்தனை.
ஆறு வயதிலேயே இத்தனை புத்தகங்களை வாசித்து முடித்தவர், ஏன் தானும் ஒரு புத்தகத்தை எழுதக்கூடாது? என்ற சிந்தனை எழவே... அப்பாவும் உதவி புரிந்தார். A4 தாளை புத்தகம் போல் தயார் செய்து "உன் கதையைப் புத்தகமாக்கு" என்று அப்பாவும் எழுதச் சொல்லவே... எப்படித் தொடங்குவது என்று தயங்கிய மகளைப் புரிந்து கொண்டு முதல் மூன்று வரிகளை மகளைச் சொல்லச் சொல்லி எழுதிக் காண்பித்தாராம். அதன் பிறகு அந்த ஆறு வயதின் பிஞ்சுவிரல்கள் எழுதிய அத்தனை எழுத்துகளும் ஒளிரத் தொடங்கின. வாசிப்பின் பலன் சிறந்த கதையை உருவாக்க அவருக்குத் துணையாய் இருந்தது. புத்தகத்தை முறைப்படி சிறப்பாக வடிவமைத்து அப்பாவும் ஆயிஷியின் கையில் பரிசளிக்க.... ஆறு வயதிலேயே ஒரு குட்டி எழுத்தாளர் உதயமாகினார்.
பூமியின் மீதான நேசம்!
ஆயுஷின் அறிவுத் திறன் மற்றும் பூமியின் மீதான இவரின் நேசம் கண்டு உறவுகள் வியக்கின்றன.
தாத்தாவின் கவிதைக்குத் தலைப்பில்லை...தவித்துக்கொண்டிருந்த தாத்தாவுக்கு உடனடியாகத் தலைப்பைக் கொடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் ஆயுஷி.
தொடர்ந்து புத்தகம் எழுத தட்டச்சு செய்ய வேண்டுமென்பது ஆசை. ஆனால் லேப்டாப் வேண்டாம், மின்சாரமென்பது பூமிக்கான கெடுதல், எனவே மின்சாரம் தேவைப்படாத டைப்ரைட்டார்தான் வேண்டுமென உறுதியாய் நின்றிருக்கிறார்.
வீட்டில் குப்பை போடக்கூடாது. முறையாக மறுசுழற்சி பைகளில், அல்லது குப்பைத் தொட்டியில் போட வேண்டும். பூமியைக் குப்பையாக்கினால் ஆயுஷிக்குப் பிடிக்காதாம்...
இந்த மாமனுசியின் அறிவாற்றல் கண்டுதான் மலேசிய சாதனைப் புத்தகமும் இவருக்கு இடம் கொடுத்திருக்கிறது.
இவரது பேச்சும், இயற்கையின் மீதான இவரது புரிதலையும் உணர்ந்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் வைபி குணராஜ், சிறப்புத் தூதராக நாடு முழுவதும் ஆயுஷியை அழைத்துச் செல்வதற்கு உறுதியளித்துள்ளாராம்.
வாசிப்பின் மகத்துவம்!
சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு இவர் தந்த பதில்களில் தெரிந்தது வாசிப்பின் மகத்துவம்.
ஏன் புத்தகம் வாசிக்கணும்? என்ற கேள்விக்கு "புத்தகம் நல்ல வழியில் நம்மை வழி நடத்தும். நிறைய நல்லது செய்யலாம். நாமே புத்தகம் எழுதி எழுத்தாளராகலாம். இப்பெல்லாம் சின்னக் குழந்தைங்க போன்தான் அதிகமா பாக்குறாங்க... புத்தகம் படிச்சா போன் பார்க்காமல் இருக்க முடியும்." என்கிறார்.
பூமி வெப்பமடைவது குறித்து வருத்தம் தெரிவிக்கும் ஆயுஷி எல்லாவற்றுக்கும் நாமதான் காரணம் என மனிதர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். இயற்கையின்மீதும், பிற உயிர்கள் மீதும் அக்கறை இல்லை என வருந்தும் ஆயுஷி, குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போடுங்கள். வெளியே வீசாதீர்கள் அதனால் பூமிக்குக் கேடு என்கிறார். கடலில் போடும் ப்ளாஸ்டிக் பைகள் மீன்களின் வாயில் போய் மாட்டிக்கொண்டால் பாவம் மீனெல்லாம் செத்துப்போகும் என்று குழந்தைத்தனமாய் கன்னத்தில் கை வைக்கிறார். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் வற்றாது வந்து விழும் வார்த்தைகளில் நம்மை வியக்க வைக்கிறார்.
இந்த டிஜிட்டல் உலகில், போன்களில் விரல்களைத் தேய்த்து உடலையும். மனதையும் கெடுத்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற குழந்தைகளுக்கு மத்தியில்... போன் வேண்டாம் அது கெடுதல்... புத்தகங்களை வாசிக்கப் பழகுங்கள் என்று குழந்தைகளுக்குச் சொல்லும் இந்தப் பெரிய மனுஷியி அறிவுரை, குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும்தான்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *