வீடு புகுந்து கொள்ளையிட்ட கும்பல் முறியடிப்பு! 40 லட்சம் வெள்ளி மதிப்புள்ள நகை கைகடிகாரங்கள் மீட்பு!

top-news
FREE WEBSITE AD


(இரா.கோபி)

கோலாலம்பூர், ஜூன் 27– கடந்த மாதம் 31 மே 2024, கோலாலம்பூர், புக்கிட் டாமான்சாராவில் உள்ள ஒரு குடியிருப்பில் 30 ஆடம்பரக் கைகடிகாரங்களுடன் 20,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளும் ரொக்கப்பணமும் காணவில்லை என ஒரு தொழிலதிபர் பிரிக்பில்ட்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக, ஜூன் 6 ஆம் தேதி  அன்று வெளிநாட்டு பிரஜைகளான 20 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க ஆடவர்களை போலீஸார் கைதுசெய்ததோடு, போலி பதிவு எண் கொண்ட ஒரு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக கோலாலம்பூர் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி டத்தோ ருஸ்டி முகமது இசா கூறினார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று, இச்சம்பவத்திற்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு உள்ளூர் பெண்ணையும் மேலும் மூன்று வெளிநாட்டு பிரஜைகளையும் போலீஸார் கைது செய்தனர். இன்னொரு உள்ளூர் பெண்ணையும் போலீஸார் 11 ஜூன் அன்று வெற்றிகரமாகக் கைது செய்தனர். கைது செய்தவர்களிடமிருந்து 1.5 மில்லியன் மதிப்புள்ள கைக் கடிகாரங்களும், 2.5 மில்லியன் மதிப்பிலுள்ள நகைகளும் 4550 வெள்ளி ரொக்கமும் பறிமுதல் செய்ய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு  4,004,550 வெள்ளி அடங்கும் என்று டத்தோ ருஸ்டி கூறினார்.

ஜூன் 14 அன்று, மேலும் ஒருவர் தாய்லாந்து குடிவரவு அதிகாரிகளால் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார். தாய்லாந்தின் பாங்காக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை மீண்டும் அழைத்து வர கோலாலம்பூர் நீதிமன்றத்தில் உத்தரவு அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் 3 வெளிநாட்டு பிரஜைகள் இம்மாதம் ஜூன் 30 வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்.

4 சந்தேக நபர்கள் தற்பொழுது ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் 457ஆவது பிரிவின் கீழ் (5) சந்தேக நபர்கள் மீது குற்றஞ்சாட்டுவதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளதோடு பிரிவு 34, குடிவரவுச் சட்டம் 1959/63, பிரிவு 6 (1) (சி), பிரிவுகளுடன் சேர்த்து குற்றவியல் சட்டத்தின் 411 கீழ் வாசிக்கப்பட்டது. சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து தகவல் அளிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான எந்தத் தகவல்களும் கிடைத்தால் ஐபிடி பிரிக்பில்ட்ஸ் 03-22979222 அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-21159999 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்திற்கு புகார் செய்யலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *