நாடற்றவர்களின் பிரச்னைகள்! சிறப்பு பணிக்குழு அவசியம்! - துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

- Shan Siva
- 06 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 6: தீபகற்ப மலேசியாவில்
நாடற்ற மக்கள் எதிர்நோக்கிவரும் விவகாரங்களுக்குத் தீர்வு காண சிறப்புப் பணிக்
குழு அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய
ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி நேற்று வலியுறுத்தினார்.
சரவாக்கில் பணிக்குழுவொன்று
அமைக்கப்பட்டதைப் பின்பற்றி இங்கும் அத்தகைய ஒரு குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்
என்று கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற நாடற்றவர்கள் மீதான ஆய்வரங்கமொன்றின்போது
செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
மலேசியாவில்
நாடற்ற மக்களின் தரவுகளைச் சேகரிப்பதுதான் அப்பணிக்குழுவின் முதல்பணியாக
இருக்க வேண்டும் என்பது அடையாளம் காணப்பட வேண்டும். சுதந்திரத்திற்கு முன்பு இந்த நாட்டில்
பிறந்தவர்களின் வாரிசுகள் கூட நாடற்றவர்களாக உள்ளனர். அந்தப் பிரச்சினைக்கு
விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டியது முதன்மையாகக் கொள்ளப்பட வேண்டும்.
நாட்டற்றவர்கள் யார் என்பதுகூட நமக்குத் தெரியாது. அதன் தொடர்பான
புள்ளிவிவரங்களை நாம் திரட்ட வேண்டும். தீபகற்ப மலேசியாவில் உள்ள
நாடற்றவர்களின் விவரங்களை விரைந்து சேகரிக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.
தீபகற்ப
மலேசியாவில் நாடற்ற மக்களின் பிரச்சினைகளைக் களைவதில் குறிப்பிட்ட சட்டச்
சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. அதற்கு நேர்த்தியான அணுகுமுறைகள்
தேவைப்படுகின்றன. சபா, சரவாக்கில்
நிலைமை வேறுமாதிரியானது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த
விவகாரத்திற்கு ஐந்தாண்டுகளுக்குள் தீர்வுகாணப்பட வேண்டும். பக்காத்தான் ஹராப்பானின்
ஆட்சிக்காலத்தில் இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும்
முன்முயற்சிகளுக்கு நான் ஆதரவளிப்பேன் என்றார் துணையமைச்சர் சரஸ்வதி.
இதனிடையே,
2024ஆம் ஆண்டு அரசமைப்புச்
சட்டத்திருத்த மசோதா பிற்போக்கான ஒன்று என மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்.
(சுஹாகாம்) உறுப்பினர் ரகுநாத் கேசவன் சாடினார். ஒரு குழந்தையிடமிருந்து
குடியுரிமையைப்பறித்தால், அதன் கதி என்ன ?
என்று அவர் வினவினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *