மெட்ரிகுலேஷன் கல்வியில் பூமிபுத்ரா கோட்டாவை ஒழிக்க வேண்டும்! - சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஜாயிட் இப்ராஹிம் வேண்டுகோள்
- Shan Siva
- 02 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 2: மெட்ரிகுலேஷன் கல்விமுறையில்
நிலவிவரும் பதற்றநிலையைத் தணிக்க அரசாங்கம் உண்மையிலேயே விரும்பினால், மெட்ரிகுலேஷன் படிப்புக்குத் திறமைசாலிகள் அனைவருக்கும் இனப்பாகுபாடு
காட்டாமல் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஜாயிட்
இப்ராஹிம் கோரிக்கை: விடுத்துள்ளார்.
எஸ்பிஎம்
தேர்வில் குறைந்தது 10ஏ மதிப்பெண்களைப்
பெறும் எல்லா மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் படிப்புக்குச் சேர்த்துக்
கொள்ளப்படுவார்கள் என்று நேற்றுமுன்தினம் புத்ராஜெயா உத்தரவாதம்
அளித்திருந்தது. அது பற்றி நேற்று கருத்துரைத்த ஜாயிட், பூமிபுத்ரா அல்லாத
மாணவர்களில் எத்தனை பேர் இந்த மதிப்பெண்களை எட்ட முடியும்? என்று கேள்வி எழுப்பினார். மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில்
பூமிபுத்ரா மாணவர்களுக்கான கோட்டாமுறையை ஒழிக்க வேண்டும். 10ஏ மதிப்பெண்களைவிட
குறைவாகப் பெற்று தேர்ச்சியடைந்த மாணவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்
அவர்களையும் அக்கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றார்.
எஸ்பிஎம்
தேர்வில் ஒன்பது, எட்டு அல்லது ஏழு
“ஏ” மதிப்பெண்கள் பெற்றவர்களின் கதி என்ன? குறிப்பாக, வறுமையில் உள்ள
இந்திய, சீன குடும்பங்களின் நிலையைக்
கண்டு நான் வருந்துகிறேன். மெட்ரிகுலேஷனில் 90 விழுக்காடு இடங்கள் பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள
நிலையில், இந்திய சீன மாணவர்கள் அக்கல்லூரியில் நுழைவதற்கு 10ஏ பெறவேண்டியுள்ளது என்றார் ஜாயிட்.
ஒவ்வோர் ஆண்டும்
எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது அல்லது மெட்ரிகுலேஷன் மாணவர்
சேர்க்கையின்போது, நாட்டில் பதற்றம் நிலவுகிறது என்று பிரதமர்
அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். நமது கல்விமுறையில் நிலவும்
பாகுபாட்டினால்தான் இத்தகைய பதற்றம் ஏற்படுகிறது. இப்பதற்றத்தைத் தணித்து
நீண்ட கால அடிப்படையிலான ஒரு தீர்வைக்
காண பிரதமர் விரும்பினால், அனைவரிடமும்
அவர் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் கடைப்பிடிக்கக்கப்பட்டு
வந்த இனக் கோட்டாமுறை 2002ஆம் ஆண்டில் அகற்றப்பட்டது. ஆயினும்,
மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் 90 விழுக்காடு பூமிபுத்ராக்களுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், குறிப்பிட்ட சில அடிப்படை படிப்புகள் ( ஃபவுண்டேஷன்) பூமிபுத்ரா
மாணவர்களுக்கென விசேஷமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *