ஜலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வுச் சம்பவத்திற்குக் கடவுளைக் குற்றவாளியாக்குவதா? ஓம்ஸ் பா.தியாகராஜன் கண்டனம் உயிரிழந்த இந்திய மாதுவின் குடும்பத்திற்கு RM 10,000 அறிவிப்பு!
- Shan Siva
- 18 Sep, 2024
கடந்த மாதம் கோலாலம்பூர், ஜலான் மஸ்ஜிட் இந்தியாவில் நில அமிழ்வு சம்பவம் ஏற்பட்டதற்குக் காரணம் கடவுளின் தண்டனைதான் என்று முதிர்ச்சியற்ற தன்மையிலான கருத்தினைத் தெரிவித்திருக்கும் பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஷெரீப் அஸ்ஹாரியின் கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அந்த நில அமிழ்வுச் சம்பவத்தில் நமது நாட்டிற்கு வந்த ஒரு வெளிநாட்டுப் பிரஜையின் உயிர் அநியாயமாகப் பறிபோயிருக்கிறது. உலகமே உற்று நோக்கிய ஒரு சம்பவம் இது. இதற்கு கடவுளின் பழிவாங்கல்தான் காரணம் என்று முட்டாள்தனமாகக் கருத்துரைத்திருப்பது பாஸ் கட்சியினரின் முதிர்ச்சியற்ற தன்மையைத்தான் காட்டுகிறது என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் சாடினார்.
இறந்துபோன அந்த இந்திய மாதுவின் ஒரு தடயத்தைக் கூட நம்மால் கண்டுபிடித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த மாதுவின் குடும்பம் என்ன பாடு பட்டிருக்கும்? தாயை இழந்த மகன் தன் தாயின் சிறு அடையாளத்தைக் கூட பார்க்க முடியாமல், அரசாங்கத்தின் பதிலை ஏற்றுக்கொண்டு வேதனையோடு திரும்பியிருக்கிறார். இந்தப் பெரும் துயரத்திற்கு இன்னும் முடிவு தெரியாமல் இருக்கும் நிலையில், இதெல்லாம் கடவுள் செயல் எனச் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர். எவருக்கும் அவர் எதிரி அல்ல... எந்த இயற்கை பேரிடருக்கும் அவர் காரணம் அல்ல. மனிதர்கள் செய்யும் தவறுகளே காரணம் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
அதுமட்டுமல்லாது அந்த மாது உயிர்த் தியாகம் செய்து நமக்கு எச்சரித்துவிட்டுப் போயிருக்கிறார். அவரது உயிர்த் தியாகத்தின் மூலம் பலரின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே இனியாவது நமது கட்டமைப்பை ஒழுங்கு செய்வோம் என்று சிந்திக்க வேண்டுமே ஒழிய, அதற்கு கடவுளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அரசியல் லாபம் பார்க்கக்கூடாது என ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
மேலும், மாயமான அந்த இந்திய மாதுவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களின் குடும்பத்தினருக்கு ஓம்ஸ் அறவாரியம், மலேசிய அரிமா சங்கம் மற்றும் தமிழ் மலர் குழுமத்தின் சார்பில் 10 ஆயிரம் வெள்ளியை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *