நாட்டைப் பாதிக்கும் வானிலை மாற்றம்! விழிப்புடன் இருக்குமாறு Niosh நினைவூட்டல்!
- Shan Siva
- 03 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 3: நாட்டைப் பாதிக்கும் அளவுக்கு மாறிவரும் வானிலை முறைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனமான நியோஷ் நினைவூட்டியுள்ளது.
பணியிட விபத்துக்கள் மற்றும்
நோய்களின் அபாயங்களைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்
என்று நியோஷ் துணைத் தலைவர் மணிவண்ணன் கோவின் கேட்டுக்கொண்டுள்ளார்.
வானிலை மாற்றங்களால் ஏற்படும்
அபாயங்களைச் சமாளிக்க முதலாளிகள் விரிவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்றும் அதே நேரத்தில் ஊழியர்கள் தீவிர வெப்பம் அல்லது தொடர் மழை காலங்களில்
விபத்துக்கள் மற்றும் நோய்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று
அவர் கூறினார்.
முன்பு, தொழிலாளர்கள் வெப்ப அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்ப
அலைகளுடன் போராட வேண்டியிருந்தது. இப்போது, லா நினா நிகழ்வு
இந்த மாதம் முதல் நாட்டை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்கள் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்வார்கள் என்று அவர் ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கடுமையான மழையின் காரணமாக
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற சூழல்கள் பாதிப்பை ஏற்படுத்தின.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
பகுதிகள்தான் காலரா, லெப்டோஸ்பிரோசிஸ்
மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களின் அபாயத்தை எதிர்கொள்ளும். அதே வேளையில், தண்ணீர் தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சலும் அதிகரிக்கும்.
எனவே, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க, ‘HIRARC’ எனப்படும்
ஆபத்து அடையாளம், இடர்
மதிப்பீடு மற்றும் இடர் கட்டுப்பாடு அணுகுமுறையைச் செயல்படுத்துமாறு முதலாளிகள்
மற்றும் ஊழியர்களுக்கு மணிவண்ணன் அறிவுறுத்தினார்.
இந்த அணுகுமுறை தொழில்சார்
பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை திறம்பட நிர்வகிக்க பல்வேறு தொழில்களில் பரவலாக
ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மழைக்காலத்தில், வழுக்குதல் மற்றும் விழுதல் போன்ற கூடுதல் ஆபத்துகள்
ஏற்படலாம். முதலாளிகளும் ஊழியர்களும் இந்த அபாயங்களைக் கண்டறிந்து, உரிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்
கொண்டார்.
வானிலை தொடர்பான அபாயங்களைக்
கண்டறிந்து குறைக்க முதலாளிகளுக்கு உதவ நியோஷ் நிபுணத்துவத்துடன் ஆலோசனை சேவைகளை
வழங்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
தொழில்சார் பாதுகாப்பு மற்றும்
சுகாதாரச் சட்டம் (திருத்தம்) 2022 இன்
கீழ்,
தொழில் வழங்குநர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற
உதவுவதற்கு ஆலோசனைகளை வழங்க Niosh தயாராக
உள்ளது,
இது ஜூன் 1 முதல்
நடைமுறைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *