சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதியில் இந்தியர்களின் அடிப்படைத் தேவைகள் அதிகமாக உள்ளது! - களத்தில் ஓம்ஸ் பா.தியாகராஜன்
- Shan Siva
- 27 Jun, 2024
சுங்கை பக்காப், ஜூன் 27: தென் செபராங்
பிறை சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி இந்தியர்களின் அடிப்படைத் தேவைகள் அதிகமாக
உள்ளது. ஆலயங்களின் நிலங்கள், தமிழ்ப்பள்ளிகளின்
கல்வித் தேவை உட்பட இன்னும் பல்வேறு பிரச்சினைகளும் இவற்றில் அடங்கும் என்று மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான
ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக சுங்கை
பாக்காப் சட்டமன்றத் தொகுதியில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, இந்திய மக்களைச் சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு
பிரச்சினைகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்த பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிம்பாங் அம்பாட், ஜாலான் தாசேக்கில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் தேவஸ்தான நிர்வாகத்தினரை சந்தித்த அவர், தேவஸ்தானத்தின் மண்டப நிலம் குறித்துக் கேட்டறிந்தார். ஆலய மண்டபத்திற்கு நிலத்தை வாங்குவதற்கான முக்கிய அடிப்படை வேலைகளை முடித்து விட்டு, பின்னர் தன்னை வந்து சந்திக்குமாறு தமதுரையில் கேட்டுக் கொண்டார்.
தேவஸ்தான நிர்வாகம் எடுத்துள்ள
முயற்சியைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆலயம் நமது இரு கண்கள் போன்றது என்றும், அதனை உறுதி செய்யும் வகையில், சிம்பாங் அம்பாட் அருள்மிகு மீனாட்சி அம்மன் தேவஸ்தான மண்டப முயற்சிக்குத் தம்மால்
இயன்ற உதவியை செய்து கொடுப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.
முன்னதாக காலையில், இங்குள்ள தேசிய வகை தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளிக்கும், தேசிய வகை சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கும் வருகை தந்து
மாணவர்களின் கல்வி நிலை மற்றும் பள்ளியின் நிலைகள் குறித்தும் கண்டறிந்தார்.
மேலும், சுங்கை ஜாவி சுங்கை பாக்காப் கம்போங் சேது இந்திய மக்களோடு கலந்துரையாடியதோடு, குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளைக்
கேட்டறிந்து பின்னர் அங்குள்ள ஓம் ஸ்ரீ சுடலை முனீஸ்வரர் ஆலயத்திற்கும் சென்றார்.
சிம்பாங் அம்பாட்டில்
வீற்றிருக்கும் தேவிஸ்ரீ மகா கருமாரி குளத்தம்மன் ஆலய நிர்வாகத்தினரைச் சந்தித்து, ஆலயம் எதிர்நோக்கி வரும் நில விவகாரத்தையும்
கேட்டறிந்தார்.
சுங்கை பாக்காப் சிம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு திடீர் வருகை புரிந்த அவர், பள்ளி நிலவரங்கள் குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்ததோடு, மாணவர்களுடனும் உரையாடினார்.
சுங்கை பாக்காப்
தொகுதியில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கி வரும் இதுபோன்ற அடிப்படைப்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும, தொகுதியில் சேவையாற்றக்கூடிய ஒரு சிறந்த மக்கள் பிரதிநிதி
அவசியம் என்று அவர் கூறினார்.
சுங்கை பாக்காப் சட்டமன்றத்
தொகுதி இந்திய மக்களுடனான இந்த நிகழ்வுகளில், நிபோங் தெபால் நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் மற்றும் கல்வி
அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன், ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி உட்பட
திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *