பினாங்கில் நடமாடும் மருத்துவப் பரிசோதனை முகாம்! எட்வெண்ட்டிஸ்ட் மருத்துவமனை ஏற்பாடு!

top-news
FREE WEBSITE AD

பினாங்கு மாநிலத்தில் தனியார் ரீதியாக செயல்படும் மருத்துவமனையாக விளங்கினாலும், வசதி குறைந்த ஏழை எளியோர் உடல் நலனிலும் அக்கறை கொள்ளும் பரிவான அடிப்படையில் தாராள அம்ச திட்டங்கள் இங்குள்ள பலருக்கு பல வழிகளிலும் நன்மையளித்து வரும் நிலையில் நேற்று காலையில் இந்த மருத்துவமனை சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட,, “உருளும் உடற் பரிசோதனை முகாம் என்ற நடமாடும் மருத்துவப் பரிசோதனைத் திட்டம், இங்குள்ள வசதியற்றோருக்கு கூடுதலான பயனைக் கொணரும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்த நடமாடும் மருத்துவப் பரிசோதனை முகாம் என்ற திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியை எட்வெண்ட்டிஸ்ட் தனியார் மருத்துவமனையின் நிர்வாகத்தினரோடு, ஜோர்ஜ்டவுன் சிட்டி அரிமா சங்கத் தலைவர் லியோங் சூக் ஹுவா, அரிமா சங்க தலைமை செயல்முறை அதிகாரி டத்தின் சாங் யின் பிங் மற்றும் இங்கிருக்கும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினரான கோனி டான் ஹூய் பெங், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கூட்டாக செயல்படுத்தினர்.

அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்கு மத்தியில், தத்தம் உடல் நலத்தைப் பேணும் பொறுப்பு, ஏழை எளியோர்க்கு பெரும் சவாலாக அமைவதாக, பினாங்கு மாநில சுகாதாரம் மற்றும் இளைஞர் விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டேனியல் கூய் தெரிவித்தார். அத்தகையோரில் அவரவர் தமது குடும்பப் பொறுப்பினை நிர்வகிக்கும் தார்மீகக் கடமையிலும், குழந்தைகளை பராமரிக்கும் அக்கறையிலும் உழன்று, உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறுவதாலேயே, பெரும்பாலோர் பல்வேறு உடல் உபாதைகளுக்கு இலக்காகும் பரிதாப நிலைமை உருவெடுப்பதாக அவர் விவரித்தார்.

இவ்வாறு உடல் நலப் பாதிப்புகளால், சுகவீனம் அடைகின்ற ஏழை எளியோருக்கு உதவும் தலையாய நோக்கத்தின் பேரில், பினாங்கு எட்வெண்ட்டிஸ்ட் தனியார் மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் உருளும் உடற் பரிசோதனை எனப்படும் சுகாதார அணுகுமுறை, எளிய மக்களுக்கு ஏந்தரும் வகையில் நல்லதொரு பயனைக் கொணருமென்று தாம் நம்புவதாகவும், இத்திட்டத்திற்கு இங்கிருக்கும் 'ஜோர்ஜ்டவுன் சிட்டி' தொகுதியின் அரிமா சங்கத்தினர் பேராதரவு அளித்திருப்பது போற்றத்தக்கது என்றும் டேனியல் புகழ்ந்துரைத்தார்.

பெரும்பான்மையானோருக்கு இருதயம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவெடுத்திருந்தாலும், அவற்றுக்கெல்லாம் தொடக்க நிலையிலேயே மருத்துவமளிக்கும் விவேக முறையில், நிவாரணமளிக்கும் வாய்ப்பும் வசதியும் எளிதாக அமையுமென்பதை கருத்தில் கொண்டு, எளியோர்களின் வசிப்பிடப் பகுதிகளுக்குச் சென்று, அவர்களுக்கு உடற் பரிசோதனைகளை மேற்கொள்ளும் இத்திட்டம், பலரது உயிர்களைக் காக்கும் வகையில் பயனளிப்பது திண்ணமென்றும் டேனியல் மேலும் கூறினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *