அத்தியாவசியமற்ற பொருள்களுக்கு 5% முதல் 10% விற்பனை வரி!

- M.ASAITHAMBY -
- 10 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 10 -
வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல், அத்தியாவசியமற்ற பொருள்கள் மீது 5 முதல் 10 விழுக்காடு வரையில் விற்பனை வரி விதிக்கப்படவுள்ளது.
அதேவேளையில், அடிப்படைத் தேவைக்கான பொருள்கள் மீதான பூஜிய விழுக்காட்டு விற்பனை வரி தொடர்ந்து நடப்பில் இருந்து வரும் என்று, நிதி அமைச்சு நேற்று மாலையில் அறிவித்தது.
இந்நிலையில், வாடகை, குத்தகை, கட்டுமானம், நிதிச் சேவை, தனியார் சுகாதார பாதுகாப்பு மற்றும் கல்வி உட்பட இதர பலவற்றுக்கு சேவை வரி விரிவுப்படுத்தப்படும்.
“எனினும், இரட்டை வரி விதிப்பை தவிர்க்கவும் சில சேவைகளுக்கு மலேசியா வரியை விதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் சில விலக்குகளை இந்த விரிவாக்கம் கொண்டிருக்கும்” என்று, நேற்று மாலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இரண்டாவது நிதி அமைச்சர் அமிர் ஹம்ஸா அசிஸான் குறிப்பிட்டுள்ளார்.
விற்பனை மற்றும் சேவை வரியின் (எஸ்எஸ்டி) விரிவாக்கம், 2025ஆம் ஆண்டில் 5,170 கோடி வெள்ளி வருமானத்தை ஈட்டித் தரும் என்று, கடந்த ஆண்டு நவம்பரில் அமிர் கூறியிருந்தார்.
கணிக்கப்பட்டுள்ள 4,670 கோடி வெள்ளி நடப்பு எஸ்எஸ்டி வசூலிப்பைக் காட்டிலும் அது 500 கோடி வெள்ளி கூடுதல் வருமானத்தைப் பதிவு செய்யும்.
தொடர்புடைய தொழில்துறைகள் மற்றும் வரி முகவர்களின் சங்கங்கள் உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் இந்த எஸ்எஸ்டி மறுஆய்வு செய்யப்பட்டதாகவும் அமிர் நேற்று தெரிவித்தார்.
“பொருளாதார சீர்திருத்தங்களை வலியுறுத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. எஸ்எஸ்டி மறுஆய்வினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஓர் இலக்கு அணுகுமுறையை மேற்கொள்ளும்” என்றும் அவர் தெரிவித்தார்.
Mulai 1 Julai, cukai jualan 5–10% akan dikenakan ke atas barangan bukan keperluan. Barang keperluan kekal tanpa cukai. Cukai perkhidmatan turut diperluas namun pengecualian tertentu dilaksana bagi elak cukaan berganda dan lindungi pengguna.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *