இதுவும் கடவுளின் தண்டனையா? பாஸ் கட்சியினருக்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் கேள்வி

top-news
FREE WEBSITE AD

கடந்த மாதம் கோலாலம்பூர் ஜலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வு ஏற்பட்டு இந்திய மாது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கொச்சைப் படுத்தும் விதமாக பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த Sharif Azhari என்பவர் அது கடவுளின் தண்டனை என்று பேசியிருந்தார்.

இப்போது நாட்டில் வேதனைக்குரிய விஷயமாக 
402 குழந்தைகள் GISBH எனும் நிறுவனத்துடன் தொடர்புடைய 20 சமூக நல இல்லங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடி உதைக்கு ஆளாகி, பாலியல் ரீதியில் பல ஆண்டுளாகத் துன்புறுத்தப்பட்டு வந்த அந்தப் பச்சிளங்குழந்தைகளை நமது காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

கடவுளின் தண்டனை என்று கோலாலம்பூர் நில அமிழ்வுச் சம்பவத்தைக் குறிப்பிட்ட அந்த நபரிடம் கேட்கிறேன்…. இந்த 402 குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்? இதுவும் கடவுளின் தண்டனையா? அந்தப் பச்சிளம் குழந்தைகளை அடித்து, உதைத்து, பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்திய ஜென்மங்கள் எல்லாம் கடவுளால் நியமிக்கப்பட்டவர்களா?

உண்மையில் தெய்வத்துக்கு நிகரான அந்தப் பச்சிளங் குழந்தைகளைத் துன்புறுத்தியவர்கள் இறைவனுடைய ஆள்களாக இருக்கவே முடியாது. எனவே, இத்தகைய முட்டாள்தனமான கருத்துகளை வெளியிடும், இறையாண்மை என்ற பெயரில் போலியாய் நடிக்கும் பாஸ் கட்சிக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் என்று, மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை துணிச்சலாக உயிரைப் பணயம் வைத்து, வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சாமல் காவல்துறைக்குத் தெரிவித்த  பெண்மணிதான் போற்றுதலுக்குரியவர். அவர்தான் கடவுளால் அனுப்பப்பட்டவர். அந்த ஒரு பெண்ணால்தான் இத்தனை குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அதே போல்தான் கோலாலம்பூரில் அறிவிப்பு பலகை எதுவும் இல்லாத நடைபாதையில் நடந்த ஓர்  இந்திய மாது, திடீரென மண்ணுக்குள் புதையுண்டு உயிர்நீத்தார்.  அவர் ஒருவரின் உயிர்த்தியாகம் இன்று பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அதோடு எச்சரிக்கையையும் விடுத்து பலரின் கண்களைத் திறந்துள்ளது. எனவே அந்த இந்திய மாதுவும் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.  

ஆனால், பாஸ் கட்சி நபர் அந்த இந்திய  மாதுவின் உயிர் தியாகத்தை கடவுளின் தண்டனை என்று சொல்வதுதான் கோமாளித்தனமாக இருக்கிறது. அவர் இந்திய மாது என்பதால்தான் இவ்வளவு எளக்காரமாக நம் சமயத்தை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார். 

அதே போல் 402 குழந்தைகள் துன்புறுத்தப்பட்ட இந்த விவகாரத்திலும், இதுவும் கடவுளின் தண்டனைதான் என்று சொல்லி தயவு செய்து கொச்சைப்படுத்தி விடாதீர்கள்.

இந்நிலையில், 402 குழந்தைகள் விவகாரம் தொடர்பாக மாட்சிமை தங்கிய நமது மாமன்னர் குரல் கொடுத்திருப்பதும், உடனடியாக அதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதும் நமது தேசத்தின் இறையாண்மையையும், நிலைத்தன்மையையும் காட்டுகிறது. அந்த வகையில் நமது மாமன்னர் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.

சுமார் 6 மாத காலமாக இது தொடர்பான கொடூரமான நடவடிக்கைகளைக் கண்காணித்து, தக்க நடவடிக்கை மேற்கொண்டு, 402 குழந்தைகளின் எதிர்காலத்தை மீட்டெடுத்த தேசிய காவல்துறைக்கும், அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடீன் ஹுசேனுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார்.

190 பிள்ளைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளனர். 402 குழந்தைகளில் 392 பேர் மனநிலை பாதிப்பில் உள்ளனர். அதில் 149 பேர் 10 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது அதிர்ச்சியாய் இருக்கிறது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வைப்புத் தொகை உள்ள 96 வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. 171 பேர் கைதாகியுள்ளனர்.  சம்பந்தப்பட்ட GISBH நிறுவனத்தின் தலைவரின் மகனும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடும் சித்ரவதைகளை அந்தக் குழந்தைகள் அனுபவித்துள்ளனர்.

எனவே, இந்தச் சம்பவத்திற்கும் கடவுளின் பழிவாங்கல்தான் காரணம் என்று சொல்லி கடவுளை அவர்கள் அவமானப்படுத்திவிடக்கூடாது என்பதுதான் நமது எண்ணமாக இருக்கிறது.

இருந்தாலும், ஒருவேளை அவர்கள் சொன்னாலும் சொல்வார்கள். வாக்குகளுக்காகவும், வாய்ப்புகளுக்காகவும் அவர்கள் எதையும் சொல்லத் தயங்கமட்டார்கள்.

அப்படித்தான் தங்களுக்கு அதிக வாக்குகள் வேண்டும் என்பதற்காக முஸ்லீம் அல்லாதவர்களைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று அண்மையில் நடந்த அவர்களின் முக்தாமாரில் தெரிவித்துள்ளனர். 

அதிலும் முஸ்லீம் அல்லாதவர்களைத் திருமணம் செய்து, அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றுங்கள் என்று, கேவலம் வாக்குகளுக்காகக் கட்டளையிட்டுள்ளனர். இத்தகைய  தரக்குறைவான சிந்தனை உள்ளவர்கள்தான் பாஸ் கட்சியினர். இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாகப் போக வேண்டுமோ அவ்வளவு இறங்கிப் பேசுவார்கள்.

மதம் மாறுவது என்பது வெறும் ஓட்டுக்காகத்தானா? 
இஸ்லாம் என்பது எல்லா மதத்தையும் போல ஒரு புனிதமான மதம். மனித வாழ்க்கைக்கான ஒப்பற்ற நீதிகள் அதில் உள்ளன. அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது என்பது வேறு விஷயம். ஆனால், வெறும் வாக்குகளுக்காக, தன் அரசியல் சுயநலத்திற்காக உலகம் போற்றும் உன்னத மதமான இஸ்லாத்தை அடகு வைப்பது கேவலமான செயல். இத்தகைய சிந்தனை கொண்டவர்களால் எப்படி மக்கள் நலனைப் பற்றி சிந்திக்க முடியும்? இறைவனையே பலிகடா ஆக்குபவர்கள், மக்களை என்ன செய்வார்கள்? என நாம் சிந்திக்க வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தினார்.

எல்லா மதங்களும் அவரவர் மதத்தை மதிக்க வேண்டும். இன்னொரு மதத்தை இழிவுபடுத்தக் கூடாது. தன் மதத்தின் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் மட்டுமே அனைத்து மதங்களின் நலனைப் பேணுவார்கள். ஆனால், போலியானவர்கள்தான் இது கடவுளின் குற்றம் என்று கடவுளையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தங்கள் பிழைப்பை நடத்துவார்கள்.

அத்தகைய சில்லரைத்தனமான வேலையைத்தான் பாஸ் கட்சி செய்து வருகிறது என்று ஓம்ஸ் பா.தியாகராஜன் சாடினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *