15 மாணவர்கள் பலியான விபத்து, பகிரங்கமாக பேச வேண்டாம்-பேருந்து ஓட்டுநருக்கு அறிவுறுத்தல்!

- Muthu Kumar
- 12 Jun, 2025
ஈப்போ, ஜூன் 12-
பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கிய பேருந்து ஒன்றின் ஓட்டுநர் அந்த விபத்து குறித்து பகிரங்கமாக எந்த அறிக்கையையும் வெளியிடக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
15 மாணவர்கள் பலியான அந்த விபத்து பற்றி புலன்விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் பகிரங்கமாக அறிக்கை வெளியிடுவது புலன்விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் என்று பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் குறிப்பிட்டார்.
தம்மிடமிருந்து அதிகாரப்பூர்வமான முறையில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் வரையில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் அது பற்றி வெளிப்படையாகப் பேசக்கூடாது. இது பல தரப்புகள் சம்பந்தப்பட்ட மிக உணர்ச்சிகரமான விவகாரம் ஆகும். முறையாக பணிகள் அனைத்தும் முடிவடையும் வரையில் அவர் காத்திருக்க வேண்டும். பேசுவதற்கு அவருக்கு எல்லா உரிமைகளும் உள்ளன. ஆனால், இதுபோன்ற உணர்ச்சிமயமான விவகாரங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றார் அவர்.
சாலை நிலவரம், வாகன நடத்துநர்களின் செயல்பாடுகள் உட்பட பல நுணுக்கவியல் அம்சங்களை நாங்கள் ஆராய வேண்டியுள்ளது என்று பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நூர் ஹிசாம் குறிப்பிட்டார்.
பேருந்து ஓட்டுநரிடமிருந்து இன்னும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவில்லை. கைகளில் ஏற்பட்ட காயங்களுக்காக தைப்பிங் மருத்துவமனையில் அவர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து ஓட்டுநர் பற்றி பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வேண்டியுள்ளது. அவரின் சுண்டுவிரல் தொடங்கி தோள்பட்டை வரை காயங்கள் காணப்படுகின்றன.
மருத்துவமனையிலிருந்து வெளியேறியவுடன் அவரிடமிருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக ரசாயனத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.திரெங்கானுவின் ஜெர்த்தேயிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிமை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாடகை பேருந்தொன்று பெரோடுவர் அல்ஸா வாகனத்தை மோதி தரம் புரண்டதில் பேருந்தில் இருந்த 15 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமுற்றனர். இம்மாதம் 9ஆம் தேதியன்று அதிகாலை 1மணியளவில் கிரிக் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் அந்த கோரவிபத்து நிகழ்ந்தது.
Seorang pemandu bas yang terlibat dalam kemalangan meragut 15 nyawa pelajar UPSI telah diarahkan oleh polis supaya tidak membuat kenyataan umum. Polis masih menjalankan siasatan terperinci terhadap punca kejadian tragik itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *