நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கு நாம் அனைவரும் முன்னுரிமை வழங்க வேண்டும் எனத் தேசிய ஒற்றுமை அமைச்சின் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
தீவிரவாதம், கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சை அதிகரித்து வரும் இந்த உலகத்தில், புரிந்துணர்வு மற்றும் பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே மதிக்கும் தன்மை அவசியம் என்றார் அவர்.
இன்று இங்கு ஐக்கிய நாடுகளின் அனைத்து உலகை அமைதி தினத்தை முன்னிட்டு மதங்களுக்கு இடையேயான இசை மட்டும் நடன விழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
இந்த விழாவில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங்கின் உரையை செனட்டர் சரஸ்வதி வாசித்தார்.
மதங்களுக்கு இடையேயான கலந்துரையாடல், ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இது பல இனங்களுக்கு இடையே ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும் என்றார் அவர்.
ஒவ்வொரு சமூகத்தின் சிறப்புத் தன்மைகள் மதிக்கப்பட வேண்டும். மலேசியர்களாக நம்மை ஒன்றிணைக்க ஒற்றுமை ஒரு பாலமாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நம்மிடையே வேறுபாடுகள் இருந்த போதிலும் மலேசியர்களாக நாம் ஒன்றிணைகிறோம்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சு தொடங்கிய மடானி நல்லிணக்கம் முயற்சிகளுக்கு ஏற்ப, தங்களின் புரிந்துணர்வை வலுப்பெறச் செய்ய மலேசியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் அனைத்து சமூகங்களுக்கு இடையே நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமது அன்றாட நடவடிக்கைகளின் வழி அமைதி மற்றும் ஒற்றுமை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.