வெ.6.7 லட்சம் மதிப்புள்ள வரி செலுத்தாத மதுபானங்கள் பறிமுதல்!

- Muthu Kumar
- 10 May, 2025
(கோகி கருணாநிதி)
மாசாய், மே 10-
ஜொகூர் மாநிலத்தின் ஸ்ரீ ஆலாமில் நடந்த அதிரடி நடவடிக்கையில், சுங்கத் துறையில் பதிவு செய்யப்படாத மதுபானங்களை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மே 8 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில், ஜொகூர் தம்போயில் அமைந்துள்ள கடற்படைத் துறையின் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது மற்றும் பறிமுதல் நடந்தது.
கம்பாஸ் வீதியில் உள்ள தாமான் மேகா ரியாவை அண்மித்த பகுதியிலிருந்து மிட்சுபிஷி புசோ லோரி மற்றும் டொயோட்டா அன்சர், ஹோண்டா ஒடிஸ்ஸி, டொயோட்டா கேம்ரி போன்ற மூன்று. வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் 44 முதல் 56 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
சோதனைக்குப் பின்னர், மொத்தம் 491 பெட்டிகள் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபானங்களின் மொத்த மதிப்பு வெ.509,214.20 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், மதுபானங்களை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் மதிப்பு வெ.170,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு .679,214.20 . கைதானவர்களில் இருவருக்கெதிராக முன்னர் நான்கு வழக்குகள் குற்றச்செயல் மற்றும் போதை சம்பந்தமானவை பதியப்பட்டிருந்தது போலீசாரின் சோதனையில் தெரியவந்தது.
இந்த வழக்கு 1967ஆம் ஆண்டின் சுங்கச் சட்டம் பிரிவு 135(1)(இ) உடன் தொடர்புடையதாக விசாரிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சமாக 10 மடங்கு அபராதம் அல்லது வெ.100,000 மற்றும் அதிகபட்சமாக 20 மடங்கு அபராதம் அல்லது வெ.500,000 அல்லது ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமட் சோஹைமி பின் இசாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி செலுத்தாத பொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பர். இது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து மக்கள் போலீசாருக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
Tiga lelaki tempatan ditahan di Johor kerana menyeludup arak tidak berdaftar, bernilai RM509,214.20. Polis turut merampas kenderaan bernilai RM170,000. Kes disiasat di bawah Akta Kastam 1967 Seksyen 135(1)(d).
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *