தனது 2 தோழிகளைக் காப்பாற்றிய பகாங் அறவாரிய பல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி மரணம்!
- Muthu Kumar
- 30 Sep, 2024
குவாந்தான், செப்.30-
கோலா கெனாவ், சுங்கை பாசிர் புத்ரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்ட தனது 2 தோழிகளைக் காப்பாற்ற முயன்ற பகாங் அறவாரிய பல்கலைக்கழக மாணவர் மூழ்கி மரணமுற்றார்.
மாரான், தாமான் மாரான் இம்பியானைச் சேர்ந்த முகமட் அமிருல் ஃபாமி சைஃபுலின் (வயது 19) சடலம் அவர் மூழ்கிய இடத்திலிருந்து 1.5 மீட்டர் ஆழத்தில் 25 மீட்டர் தூரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.12 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் புசு தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 19 வயதுடைய 2 மாணவிகளும் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டு விட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சுங்கை லெம்பிங் சுகாதார கிளினிக்கிற்குக் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் காலை 10.20 மணிக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சுங்கை லெம்பிங் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர். இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைப்படி புக்கிட் பனோராமா மலையை ஏற கல்லூரியிலிருந்து சுங்கை லெம்பிங்கிற்கு முகமட் அமிருல் உட்பட 6 பேர் காலை 6.00 மணிக்குப் புறப்பட்டனர். மலையேறிய பிறகு குளிப்பதற்காக பாசிர் பூத்தே சுற்றுலா தளத்திற்குக் காலை 8.30 மணிக்குச் சென்றனர். குன்றிலிருந்து ஐந்து மீட்டர் அமிருல் தன் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது நண்பர்களில் ஒரு பெண் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு கிட்டத்தட்ட மூழ்கும் நிலைக்குச் சென்று விட்டார். அதைப் பார்த்த ஒருவர் அவரைக் காப்பாற்ற நீந்திச் சென்று கொண்டிருந்த போது இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் முகமட் அமிருல் ஆற்றோரத்திற்குக் கொண்டு சென்றார்.அதன் பிறகு முகமட் அமிருல் காணாமல் போய் விட்டதை நண்பர்கள் உணர்ந்தனர். இவரைத் தேடி மீட்கும் பணிகளை தீயணைப்புப் படையினர் உட்பட பொதுமக்களும் மேற்கொண்டதில் 1 மணி நேரத்திற்குப் பிறகு இவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
முகமட் அமிருலின் சடலம் சவப் பரிசோதனைக்காக குவாந்தான் தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் புசு குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *