தேசிய ஒற்றுமை என்பது தேசியத் தேவை-அன்வார் வலியுறுத்தல்!

- Muthu Kumar
- 03 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 3
தேசிய ஒற்றுமை என்பது இனியும் ஒரு விருப்பத் தேர்வாக இருக்கக் கூடாது. மாறாக, நாட்டின் மேம்பாடு இடைவிடாமல் தொடர்வதை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய தேசியத் தேவையாக அது இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று வலியுறுத்தினார்.
நாட்டின் மேம்பாட்டுக்கு ஒற்றுமை ஓர் அடித்தளமாகும். மலேசியாவின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தும் உந்து சக்தியாகவும் அது விளங்குகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தால்தான் மலேசியாவுடன் இருக்க முடியும் என்று அன்வார் சுட்டிக் காட்டினார்.
அனைத்து வகையான முன்னேற்றங்களுக்கும் அடிப்படைக் கூறுகளாக இருப்பது நிலைத்தன்மையும் தேசிய ஒற்றுமையும் ஆகும். துரித மாற்றங்களையும் எண்ணற்ற சவால்களையும் கொண்டுள்ள இவ்வுலகில் ஒற்றுமை என்பது நம்முடைய விருப்பத் தேர்வாக இருக்கக்கூடாது. மாறாக, அதுவோர் அத்தியாவசியத் தேவையாக இருக்க வேண்டும் என்றார் அன்வார்.
இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்துவப் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற விருதளிப்புச் சடங்கில் வழங்கிய வாழ்த்துரையில் அன்வார் குறிப்பிட்டார். அச்சடங்கில் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியாவும் கலந்துகொண்டார்.
பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல், மேலவைத் தலைவர் டத்தோ அவாங் பெமி அவாங் அலி பாசா, தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி பாட்சில், இதர அமைச்சரவை உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
மாட்சிமை தங்கிய பேரரசரின் ஆசியுடனும் வழிகாட்டுதலின் பேரிலும் செயல்படும் மடானி அரசாங்கம், தன்னுடைய மடானி கோட்பாடுகளின் அடிப்படையில் பரந்த அளவில் சீர்திருத்தங்களை அமல்படுத்த கடப்பாடு கொண்டுள்ளது என்றும் அன்வார் கூறினார். புறமேம்பாடுகள் மட்டும் போதுமானவை அல்ல. மனிதப் பண்புகள், சமூக நீதி மற்றும் மானுடக் கருணை ஆகியவையும் அதில் இரண்டற கலந்திருக்க வேண்டும் என்றார் அவர்.
Perdana Menteri Anwar Ibrahim menegaskan bahawa perpaduan nasional bukan lagi pilihan, tetapi satu keperluan penting demi kemajuan negara. Beliau menyeru agar perpaduan dijadikan asas pembangunan dan diterapkan nilai-nilai kemanusiaan, keadilan sosial dan ihsan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *