மத்திய அமைச்சரவை மாற்றத்தினால் சிலாங்கூர் சட்டசபையிலும் மாற்றம் ஏற்படக்கூடும்!

- Muthu Kumar
- 31 May, 2025
கோலாலம்பூர், மே 31-
அமைச்சரவையில் நிகழக் கூடிய மாற்றங்களின் தாக்கம் சிலாங்கூர் மாநில சட்டசபையிலும் எதிரொலிக்கும் என்று தற்போது பரவலாக கூறப்பட்டு வருகிறது.
அண்மைய பிகே ஆர் கட்சித் தேர்தலில் தமது துணைத் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதில் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியும் உதவித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்வதில் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் தோல்வி கண்ட பின்னர் தங்களின் அமைச்சர் பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
அவ்விரு அமைச்சர் பதவிகளில் ஒன்றுக்கு, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நியமிக்கப்படக் கூடும் என்ற ஆருடங்களும் பரவலாகப் பரவத் தொடங்கி இருக்கின்றன.பிகேஆர் கட்சித் தேர்தல் முடிவுகள் அதாவது உயர் மட்டப் பதவிகள் அடிப்படையில் பார்த்தால் நான்கு உதவித் தலைவர்களில் அமிருடின்தான் அதிக வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கின்றார்.
கட்சிப் பதவிகள் அடிப்படையில்தான் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்களைக் கொண்டு அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்று ரபிஸியும் நிக் நஸ்மியும் இதற்கு முன்னர் கூறியிருந்தனர்.
எனினும், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான ஆர்வத்தை அமிருடின் வெளிப்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதுபோன்ற ஒரு செய்தி வெளியானபோதும் அமைச்சராக பதவி வகிக்க தாம் விரும்பவில்லை என்றும் அமிருடின் கூறியிருந்தார்.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஐந்தாண்டு கால தவணை நிறைவடைய விருக்கிறது. அது வரைக்குமாவது மாநில மந்திரி பெசாராக தாம் தொடர்ந்து இருந்து வர விரும்புவதாகவும் கடந்த ஆண்டில் அவர் கூறியிருந்தார். எனினும், அவரின் திட்டத்தில் மாற்றம் ஏற்படுமாயின், அவர் வகித்து வரும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை நிரப்புவதற்காக அவருக்கு பதிலாக ஒரு புதிய வேட்பாளரைத் தேட வேண்டியிருக்கும்.
இப்பதவிக்கு முன்பு இருவரின் பெயர்கள் அடிபட்டு வந்தன. தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினரும் தமது முன்னாள் உதவியாளருமான பொர்ஹான் அஹ்மாட் ஷாவே அவரின் தேர்வாக இருந்தார்.ஆயினும், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருடன் நெருக்கமான உறவை வைத்திருக்கும் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஃபாமி ஙா மற்றொரு வேட்பாளராக இருந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மாநில மந்திரி பெசார் பதவிக்கு பரிசீலனை செய்யப்படுவதற்காக அமிருடினின் பெயருடன் சேர்த்து ஃபாமி காவின் பெயரும் முன்மொழியப்பட்டிருந்தது.அமிருடின் தொடர்ந்து மாநில மந்திரி பெசாராக நீடித்து வந்தால், பதவி உயர்வு பெறும் ஃபாமியின் வாய்ப்பு பாதிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்மைய கட்சித் தேர்தல் முடிவை காரணம் காட்டி அமிருடினின் சட்டசபை ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ஃபாமி விடுபடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்வாருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தாலும், பெட்டாலிங் ஜெயா பிகேஆர் தொகுதித் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஃபாமி தோல்வியடைந்துள்ளார். இப்பதவியை இழந்ததோடு, கட்சியின் மத்திய தலைமைத்துவக் குழுவில் 20 இடங்களுக்கான தேர்தலிலும் ஃபாமி தோல்வியுற்றார்.
அதனால், மந்திரி பெசார் பதவிக்கான தேர்வில் ஃபாமியின் நிலை சாதகமற்ற நிலையில் இருப்பதால், அவருக்கு பதிலாக மந்திரி பெசாராக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பை மூவர் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.கோல கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் ஸமான் ஹூரி, கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் இஸுவான் காசிம் மற்றும் லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அஹ்மாட் சைட் அப்துல் ரஹ்மான் ஆகியோரே அம்மூவராவர்.
Selepas kekalahan Rafiqi Ramli dan Nik Nazmi dalam pemilihan PKR, perubahan menteri di Selangor dijangka berlaku. Amirudin Shari berpotensi kekal Menteri Besar, manakala tiga calon lain dipertimbangkan jika beliau berundur.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *