நெடுஞ்சாலையில் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது- டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி!
- Muthu Kumar
- 30 Sep, 2024
பாலிக் புலாவ், செப்.30-
துன் டாக்டர் லிம் சோங் இயூ நெடுஞ்சாலையைப் பந்தய இடமாகக் கொண்டு அபாயகரமான முறையில் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த கைது நடவடிக்கையை புக்கிட் அமான் சாலைப் போக்குவரத்து விசாரணைத் துறையின் உளவுப் பிரிவு அதிகாரி மற்றும் காவல்துறையினர் நேற்று பின்னிரவு 1.00 மணிக்கு மேற்கொண்டதாக அத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி தெரிவித்தார்.இதில் ஒரு கார் ஓட்டுநர், 14 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடக்கமாக மஸ்டா ரோஸ்ட்டர் ஆர்எஃப் ரக காரை ஓட்டிய 25 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில் அவர் சாலையை 2 முறை சுற்றி டயரை இழுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 12 முதல் 24 வயதிற்குட்பட்ட 14 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் சூப்பர்மேன், ஸிக் ஸேக், தங்களுக்குள் போட்டியிடுதல் போன்ற சாகசங்களைப் புரிந்தனர்.
போலீஸ் விசாரணைக்கு உதவும் பொருட்டு மஸ்டா ரோஸ்ட்டர் ஆர்எஃப் கார் (1), மோடெனாஸ் கிரிஸ், ஹோண்டா டேஷ், ஹோண்டா இஎக்ஸ்5, யமாஹா ஒய்ஸெட்15ஆர் ரக 14 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கைது செய்யப்பட்டவர்கள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் மேல் நடவடிக்கைக்காக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம், 42ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுவதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹாசான் பஸ்ரி குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *