நெடுஞ்சாலை சுக்குக் நிதி முறைகேடு: இதுவரை வெ.85.6 மில்லியன் பறிமுதல்!

- Muthu Kumar
- 01 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 1-
கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைத் திட்டத்துடன் தொடர்புடைய சுக்குக் நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற்போது நடந்து வரும் விசாரணையின் ஓர் அங்கமாக, சுமார் 8 கோடியே 56 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகளை மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைப்பற்றியிருப்பதுடன் வங்கிக் கணக்குகளையும் முடக்கி இருக்கிறது.
டான் ஸ்ரீ பட்டத்தைக் கொண்டுள்ள இத்திட்டத்தின் குத்தகையாளர் ஒருவரை மையமாக வைத்து இவ்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்திற்கான நிதியை அவர் தமது சொந்த பயன்பாட்டுக்காக திசை திருப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.
விசாரணை தொடர்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளவற்றில், மொத்தம் 45 லட்சம் வெள்ளிப் பணம் வைக்கப்பட்டுள்ள 14 தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கும் 3 கோடியே 30 லட்சம் வெள்ளிப் பணம் எட்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றப்பட்டிருப்பதும் அடங்கும் என்று, எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இவற்றை தவிர்த்து 76 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள சொகுசு கார்கள், 30 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கைப்பைகள், 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் மற்றும் 2 கோடியே 45 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“அந்த டான் ஸ்ரீக்குச் சொந்தமான குத்தகையாளரின் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான சுக்குக் பணம் மாற்றப்பட்டிருப்பதாகவும் அந்த நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு பயன்படுத்துவதைக் காட்டிலும் அப்பணம் பின்னர் தனிப்பட்ட நலன்களுக்காக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் நாங்கள் நம்புகிறோம்” என்று அஸாம் தெரிவித்தார். அந்த நிதி, பினாமி நிறுவனங்கள் மற்றும் அந்த டான் ஸ்ரீயின் மனைவியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு உட்பட பல நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
சொத்துகள் உட்பட ஆடம்பர வாகனங்கள் மற்றும் பொருள்களை சூதாட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காகவும் அப்பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், எம்ஏசிசி
விசாரணையாளர்கள் அந்த டான் ஸ்ரீயிடமிருந்து இதுவரையில் வாக்கு மூலங்கள் எதனையும் பதிவு செய்திருக்கவில்லை.ஆனால், இவ்விவகாரம் தொடர்பில், இதுவரையில் 45 பேரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் 30 முதம் 50 சாட்சிகள் அழைக்கப்பட இருக்கின்றனர். அந்த டான் ஸ்ரீயின் குடும்ப உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
Suruhanjaya Pencegahan Rasuah Malaysia (SPRM) menyita aset bernilai RM85.6 juta termasuk akaun bank, kenderaan mewah dan barangan kemas berkaitan penyalahgunaan dana sukuk projek lebuh raya. Seorang Datuk Seri disyaki menyeleweng dana untuk kepentingan peribadi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *