பினாங்கை அதிரவைத்த இந்தியர் நடனத் திருவிழா!
- Thina S
- 29 Sep, 2024
பினாங்கு அரசுக் கட்டிடமான கொம்தாரில் பினாங்கு மாநில இந்தியத் திரைப்படச் சங்கத்தின் உள்ளூர் கலைஞர்களின் நடனத் திருவிழா வெகு சிறப்பாக நடந்தேறியது. சுற்றுலாத் துறையின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நடனத் திருவிழா, பிரதமர் துறையின் இணை ஆதரவுடன் நடைபெறுவது பெரும் அங்கீகாரமாகத் தாம் கருதுவதாக ஏற்பாட்டுக் குழு தலைவரும், தமிழ்த்திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் பிரபு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஆடல் பாடல் நடிப்பு என முத்தமிழின் சங்கமமாய் இந்நிகழ்ச்சி நிறைவான நிகழ்ச்சியாக அமைந்ததாக நிகழ்வின் சிறப்பு வருகையாளர் தொழிலதிபர் சிங்கப்பூர் சின்னையா தெரிவித்தார். நாட்டின் புகழ்ப்பெற்ற கலைஞர்களையும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் ஒருங்கிணைத்து இந்த நடனத் திருவிழா அரங்கேற்றம் கண்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலங்களிலும் இது மாதிரியான கலை கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி, உள்ளூர்க் கலைஞர்களுக்கான மேடையை வழங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சிங்கப்பூர் சின்னையா கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களின் கலாச்சார நடனங்களான பரதம், ஒடிசி, மோகினியாட்டம், கதக், கதகளி, குச்சுப்புடி, மணிப்புரி என பல்வேறு அரிதான நடன வகைகள் அபிநயங்களால் மேடையை அலங்கரித்ததில் அவையினர் வியப்பில் ஆழ்ந்தனர். உள்ளூர்க் கலைஞர்களின் அபார ஆற்றலைக் கொண்டாடினர். இளம் நடனக் கலைஞர்களைக் கொண்ட ஜி.டி,ஏ நடனக் குழுவினர், வானவில் நடனக் குழுவினர், ஈஸ்வரி நடனக் குழுவினர் என அத்தனை உள்ளூர்க் கலைஞர்களின் அசத்தல் படைப்புகளால் கொம்தார் முழுக்க கொண்டாட்டம் உற்சாகமாய் பூரித்தது.
இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த தன்னுடன் இணைத்து பயணித்த அனைத்து தரப்பினருக்கும் தாம் உளமார நன்றி நவில்வதாகவும், இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த மடானி அரசுக்கும், பினாங்கு மாநில அரசுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் முனைவர் லட்சப் பிரபு தெரிவித்தார்.கலைஞர்கள் சங்கமிக்கும் இந்நிகழ்ச்சியில்,, பினாங்கில் உள்ள அன்பு இல்லத்தில் வளரும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கும் சிறப்புகள் செய்யப்பட்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து, இந்நிகழ்ச்சியை அவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கண்டுகளித்தது தனக்கு மனநிறைவை அளித்ததாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் பிரபு நெகிழ்ச்சியுடன் கூறினார்.தான் இதுவரையில் இயக்கிய 3 திரப்படங்களையும் அன்பு இல்லம் போன்ற இல்லங்களில் உள்ளவர்களுக்காக சிறப்புக் காட்சியாக திரையரங்குகளில் ஏற்பாடு செய்து கண்டு மகிழ்ந்ததையும் இயக்குநர் விக்னேஷ் பிரபு நினைவுகூர்ந்தார்.
இந்தியர் நடனத் திருவிழா போல பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தும் எண்ணம் தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் ஆதரவு இருக்கும் நிலையில் மலேசியா முழுவதும் இது மாதிரியான கலைநிகழ்ச்சிகளை நடத்தி உள்ளூர்க் கலைஞர்களை ஒருங்கிணைக்கும் செயலைத் தாம் தொடர்ந்து செய்வேன் என ஏற்பாட்டுக் குழு தலைவருமான விக்னேஷ் பிரபு உறுதியளித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *