பாக்கெட் சமையல் எண்ணெய் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும்- டாக்டர் சரவணன் தம்பிராஜா!
- Muthu Kumar
- 30 Sep, 2024
கோலாலம்பூர், செப்.30-
பில்லியன்கணக்கான மக்களின் பணம் கடத்தல்காரர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. 1 கிலோ பாக்கெட் சமையல் எண்ணெய்யின் மோசடிச் சம்பவத்தில் இந்த நிலைதான் தொடர்ந்து சித்தரிக்கப்படுகிறது. உதவித் தொகை பாக்கெட் சமையல் எண்ணெய் கடத்தல் சம்பவங்கள் உள்நாட்டுக் கையிருப்புகளை பாதிப்பதோடு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மைக்கும் ஊறு விளைவிக்கிறது என்று மலேசியப் பயனீட்டாளர் சங்கங்கள் சம்மேளனத்தின் (ஃபோம்கர்) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சரவணன் தம்பிராஜா தெரிவித்தார்.
மலேசியர்களின் சுமைகளைக் குறைக்க வேண்டிய உதவித் தொகை துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது. இந்நிலை சந்தைகளில் சமச்சீரற்ற தன்மையை மட்டுமின்றி மக்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்திவிடுகிறது. நியாயமான வாழ்க்கைச் செலவினங்களை நிலைப்படுத்துவதில் நாம் பெரிய அழுத்தத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.
இதுபோன்ற கடத்தல் மலேசியப் பயனீட்டாளர்களுக்குச் சுமைகளைத்தான் அதிகரிக்கும்.மக்களின் பணம் கடத்தல்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டு அந்நியர்களிடம் கொடுக்கப்படுகிறது. எண்ணெய்க்கான உதவித் தொகை என்பது மலேசியர்களின் உரிமை. அது இம்மாதிரியான கடத்தல் சம்பவங்களின் மூலம் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டால் இது உண்மையில் மக்களிடமிருந்து அடிக்கப்படும் ஒரு வகைக் கொள்ளையாகும்.
உதவித் தொகைக்காக அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு காசும் வருமானவரி செலுத்துபவர்களிடமிருந்து பெறப்பட்டதாகும்.அது கடத்தல்காரர்களிடம் சிக்கி விட்டால் நாம் நிதி வளத்தை இழப்பது மட்டுமின்றி மக்களின் சமூகநலனைப் பாதுகாக்கும் முயற்சிகளும் சீர்குலைந்து போய் விடும். இத்தகைய பொறுப்பற்ற செயலுக்குத் தீர்வு காண்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. அதைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாகக் கடுமையான முறையில் தீர்க்க வேண்டும்.
இந்த கசிவு நடவடிக்கை தொழிற்சாலை உற்பத்தியில் தொடங்கிக் கட்டம் கட்டமாக விநியோகிப்பு வரை நிகழக் கூடியதாகும். இதை அனைத்து நிலைகளிலும் கடுமையான முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.அந்த வகையில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களைக் கண்காணித்தல், மாநில எல்லைப்பகுதிகள், அண்டை நாடுகளின் விநியோகிப்புத் தரப்பினரிடம் சோதனை நடவடிக்கையும் அடங்கும்.
வெளியே கடத்திச் செல்லப்படும் சமையல் எண்ணெய்க் கையிருப்புகளை கண்காணிக்க அதிநவீன கண்டுபிடிப்பு முறை போன்ற தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் இரு நாட்டு அமலாக்க நிறுவனங்களுக்குமிடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆகையால் இந்த கடத்தல் சம்பவங்கள் முறியடிக்கப்படுவதை உறுதி செய்ய அண்டை நாடுகள் குறிப்பாக தாய்லாந்து தரப்புடனான ஒத்துழைப்பு உறுதிப்படுத்திக் கொள்ளப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகச் செய்தியாளர்களிடம் பேசிய போது டாக்டர் சரவணன் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *