கௌரவப் பட்டங்கள் விற்பனைப் பொருள்கள் அல்ல-பேரரசர் நினைவுறுத்தல்!

- Muthu Kumar
- 03 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 3-
கூட்டரசுக் கௌரவப் பட்டங்கள் விற்பனைக்கானவை அல்ல. மேலும், அவற்றை வாதாடிப் பெறவும் முடியாது. நாட்டுக்கு உளப்பூர்வமாக சேவையாற்றுபவர்களுக்கு மட்டுமே அப்பட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நேற்று நினைவுறுத்தினார்.
நேற்று தமது அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விருதளிப்புச் சடங்கில் உரையாற்றியபோது பேரரசர் இதனைத் தெரிவித்தார்.பட்டங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் எனும் வழிகாட்டிகளை அரசாங்கம் வெளியிட்டிருந்தாலும், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் நான் தனிப்பட்ட முறையில் பரிசீலனை செய்வேன் என்று அவர் கூறினார்.அரசாங்கத்திற்கு நீண்ட காலம் சேவையாற்றி வருபவர்கள் அல்லது நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள் ஆகியோரை மட்டுமே பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என்பது எனது கருத்தாகும். ஆனால், இந்த அடிப்படைத் தகுதி பலருக்கு இருப்பதில்லை என்றார் அவர்.
இப்பட்டங்களைப் பெற பலர் முயற்சி செய்துவந்தாலும் அவர்களை நான் பொருட்படுத்துவது இல்லை. “டத்தோ" அல்லது "டான்ஸ்ரீ" போன்ற பட்டங்கள் விற்பனைப் பொருட்கள் அல்ல. ஒருவரிடம் அதிகம் பணம் இருந்தால், பட்டங்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதை விடுத்து அறப்பணிகளுக்காகவும் ஏழைகளின் நலனுக்காகவும் அப்பணத்தை அவர்கள் செலவிட வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தினார். நேற்று பட்டங்களைப் பெற்ற 104 பிரமுகர்களும் அதனைப் போற்றி மதிக்க வேண்டும். அப்பட்டங்களைப் பெறுவதை அவர்கள் கௌரவமாகக் கருத வேண்டும் என்றார் அவர்.
உணர்ச்சிகரமான விவகாரங்கள் அல்லது பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்களைத் தங்களின் அரசியல் விளையாட்டுக்குப் பயன்படுத்த வேண்டாமென்று இவ்வேளையில் தலைவர்கள் அனைவரையும் வலியுறுத்த விரும்புவதாகவும் பேரரசர் கூறினார்.
எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் நன்றாக சிந்தியுங்கள். மக்களின் ஒற்றுமையைத் தவிர எனக்குப் பெரிய வெகுமதி எதுவும் கிடையாது. நாட்டை "வைரஸ்' (கிருமிகள்) தாக்கப் போவதாக முன்பொரு முறை கூறியிருக்கிறேன். இப்போது அது பரவிக் கொண்டிருக்கிறது. அதனைக் குணப்படுத்த முடியாது என்று தோன்றுகிறது. நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இதனை அடிக்கடி நினைவூட்டி வருகிறேன் என்றும் சுல்தான் இப்ராஹிம் சொன்னார்.
Yang di-Pertuan Agong Sultan Ibrahim menegaskan bahawa anugerah kehormatan bukan untuk dijual atau dipohon secara melampau. Hanya mereka yang benar-benar berkhidmat kepada negara wajar diberi pengiktirafan, dan pemimpin dinasihatkan elak eksploitasi politik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *