இந்திய முப்படைகளுக்கும் ஒரு சல்யூட்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்

- Shan Siva
- 08 May, 2025
கிள்ளான், மே 8: இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் போர்ச் சூழலை உலகமே உற்று நோக்குகிறது. அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ரத்த வெறி காட்டியிருக்கிறது ஒரு கூட்டம். அநியாயமாய் பலியான அந்த 26 உயிர்களின் ஆத்மாவும் சாந்தி பெறட்டும், அதற்கு ஒரு நியாயம் கிடைக்கட்டும் என மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நெற்றியில் மங்கலக் குங்குமம் இட்டிருந்தவர்கள் இன்று அமங்கலக் கோலத்தோடு
கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உலகின் எந்த ஆயுதத்தை விடவும்
மிகவும் வலிமையானது கண்ணீர் எனும் ஆயுதம். அதிலும் பெண்களின் கண்ணீருக்குப்
பேராற்றல் உண்டு. அந்தக் கண்ணீர் ஆயுதம் கொண்டு, அவர்கள் இழந்த மங்கலக் குங்குமத்தின் பேரில் ‘ஆபரேஷன்
சிந்தூர்’ எனும் பொருள்படும்படியான ஓர் அறிவிப்பை இந்திய
அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் கண்ணீர் எவ்வளவு கனமானது என்பதை இந்திய முப்படைகளும்
சம்பந்தப்பட்டத் தரப்புக்கு உணர்த்த, சர்வ வல்லமையோடு, மிக நேர்த்தியாக திட்டம் வகுத்திருக்கிறார்கள்.
முறையாக, போர் மரபு மீறாமல் இந்திய அரசு காய்களை நகர்த்தி
வருவது பாராட்டுக்குரியது.
நிமிசத்துக்கு நிமிசம் என்ன
பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று
தெரியாமல் வார்த்தைகளை விட்டுக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் போல் அல்லாமல், இந்தப் பதற்றமான சூழலில் இந்தியா எடுக்கும் முடிவுகள் அறிவுப்பூர்வமாக
இருக்கிறது. அந்த வகையில் இந்திய முப்படைகளுக்கும் ஒரு சல்யூட் என்று ஓம்ஸ்
பா.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் உள்ள இந்து
பெருமக்களுக்கு அந்த 26 பேரின் மரணம் வலியாகவே இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
மதம் எனும் பெயரில் இப்படிப் பேயாட்டம் போட்டிருக்கும் அந்தத் தீவிரவாதக்
கூட்டத்தின் மீது எல்லாருமே வெறுப்பாய்தான் இருக்கிறோம். உலக மக்களோடு சேர்ந்து
அநியாயமாய் பலியான அந்த அப்பாவி
மக்களுக்கான நியாயத்தை வேண்டிக்கொண்டுதான் இருக்கிறோம். நிச்சயம் மோடி தலைமையிலான
இந்திய அரசு நல்லதொரு தீர்வைக் கண்டடையும் எனத் தாம் நம்புவதாக ஓம்ஸ்
பா.தியாகராஜன் கூறினார்.
நமது நாட்டில் நாமே இவ்வளவு
கவலைப்படுகிறோம். பாதிக்கப்பட்ட இந்தியாவில் மக்கள் எப்படிக் கொதித்திருப்பார்கள்.
இருந்தாலும் மக்களும் அங்கே பொறுமையாக இருந்து தங்கள் எதிர்வினையை நியாயமான
நோக்கோடு காட்ட நினைக்கிறார்கள். பாகிஸ்தான் போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல்
போருக்கான தயார் நிலையில் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். அந்த மக்களின்
உணர்வுகளையும் நாம் போற்ற வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
தீவிரவாதிகள் செய்திருக்கும்
இந்தத் தாக்குதல் கொடூரமானது என்றாலும் கூட, அவர்களுக்கு பால் ஊற்றி வளர்த்தவர்கள் ஒருபுறம் இருக்க... பொதுமக்களைச்
சீண்டாமல், தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து ஆப்பரேஷன்
சிந்தூர் என்று குங்குமத்தை தெளித்துப் பயம் காட்டியிருக்கிறது இந்தியா.
எங்கள் இலக்கு தீவிரவாதம்தான், பாகிஸ்தான் அல்ல என தீவிரவாத முகாம்களை மட்டுமே
தாக்கியிருக்கிறது இந்தியா.
பொதுமக்கள் மீது எந்தச் சேதமும்
வரக்கூடாது, ஏற்படுத்திவிடக்கூடாது
என்று சிந்தித்து செயல்பட்டு வட்டமிட்டு தீவிரவாத பகுதிகளில் தாக்கல்
நடத்தியிருக்கிறது இந்தியா. இது சாதாரண விஷயமில்லை.
இந்தத் தாக்குதல் முழுக்க
முழுக்க கண்ணீர் தாக்குதல் என்று சொன்னால் அது மிகையாகாது என்று ஓம்ஸ்
பா.தியாகராஜன் கூறினார்.
அதிலும் இந்திய ராணுவத்தின்
பெண் தளபதிகள் இருவரின் தலைமையில் இந்த ஆப்பரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம்
அரங்கேற்றியது குங்குமம் இழந்த பெண்களே களத்தில் இறங்கி போராடியதுபோல் இருக்கிறது.
இதைவிட ஒரு சாதுரியமான பதிலடி எதிரிக்கு வேறு இருக்க முடியாது.
எங்களுக்குத் திலகம் இடவும்
தெரியும், தீய சக்திகளை தீயாய் மாறி எரித்துப்
பொசுக்கவும் முடியும் என நிருப்பித்திருக்கின்றனர், அந்த
இந்திய ராணுவ பெண் தளபதிகள். அவர்களுக்கும் எனது சல்யூட் என ஓம்ஸ் பா.தியாகராஜன்
கூறினார்.
நன்றிகெட்ட பங்களாதேஷ் போன்ற
நாடுகளுக்கு எல்லாம் இது ஒரு பாடமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
உலக நாடுகளில் பலபேர் இந்தச்
சூழலைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக உசுப்பேத்துகிறார்கள். குறிப்பிட்ட ஒரு
நாடு ரொம்பவே உசுப்பேத்துகிறது. தங்களுக்கு ஈடாக இந்தியா வந்துவிடக் கூடாது என்று
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குளிர்காய நினைக்கிறது. அதற்கு ஏற்றார் போல்
பாகிஸ்தானும் கொஞ்சமும் யோசிக்காமல் கிறுக்குக் கருத்துகளை அள்ளித் தெளிக்கிறது.
இப்போது பாகிஸ்தானின் ராணுவ
அமைச்சர் கவாஜா ஆசிப் விடுத்திருக்கும் புதிய அறிக்கை அந்த மாதிரி
கோமாளித்தனமானதுதான். இந்தியா பாகிஸ்தானை
தாக்கும் துணிச்சல் காட்டினால், மற்றும்
பாகிஸ்தானின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் நிலை வந்தால், பாகிஸ்தான் அழியும் நிலை ஏற்பட்டால், உலகில் யாரும் உயிர் வாழ முடியாது எனப் பேசியிருக்கிறார். பக்குவமற்ற
இந்தப் பேச்சை என்னவென்று சொல்வது?
அந்த வகையில் இந்தியாவின்
அணுகுமுறையை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு
நியாயம் வேண்டும், அதே வேளை இனி
இந்தியாவிடம் எவனும் வாளாட்டக்கூடாது என மிக நேர்த்தியாய் இந்திய இராணுவமும், ஆளும் தரப்பும் போருக்கான யுத்திகளை வகுத்து வருகிறது.
போரே வேண்டாம் என்பதுதான் உலக
மக்களின் எதிர்பார்ப்பு. மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும். இருக்கும் கொஞ்ச காலத்தை
இயல்பாய் கழிக்க வேண்டும் என்பதுதான் எல்லாரது எண்ணமும். ஆனால், மக்களை எல்லா நேரத்திலும் அச்சத்தில் வைத்திருக்க நினைக்கும்
தீவிரவாதக் கூட்டத்தை களையெடுக்காமல் இருந்தால், அதுவும்
ஆபத்துதான். அந்த வேலையைத்தான் இப்போது இந்தியா செய்து வருகிறது. அது ஈடேறட்டும்.
மக்கள் சுபிட்சமாக வாழ எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.
மக்களைத் துச்சமாக நினைக்கும் தீய
சக்திகள் ஒழியட்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.
குங்குமத்தின் சக்தியில் குலை நடுங்கட்டும் அந்தத் தீவிரவாதக் கூட்டம் என ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது கருத்தை முன்வைத்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *