சிலாங்கூர் மாநில ரீதியில் மூன்றாவது முறையாக ஜூனியர் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டி!
- Muthu Kumar
- 25 Sep, 2024
கிள்ளான், செப்.25-
சிலாங்கூர் மாநில ரீதியில் இருக்கும் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை சிறந்த கலைஞர்களாக உருவாக்கிடும் சமூகக் கடப்பாட்டில் இவ்வாண்டும் மூன்றாவது முறையாக ஜூனியர் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டி யை இதன் ஏற்பாட்டுக் குழுவினரின் பேராதரவோடு நடத்துவதற்கு தாம் இசைவு தந்துள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுடைய பாடும் திறன் கொண்ட 9 வயதுக்கும் 15 வயதுக்கும் இடையிலான இளம் கலைஞர்கள் தங்களது பதிவை 29.9.2024 க்குள் உறுதி செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இளம் கலைஞர்களைத் தேர்வு செய்யும் வகையில் அவர்களுக்கான முதல் சுற்று தேர்வு வரும் 5.10.2024 மற்றும் 6.10.2024 ஆகிய இரு தினங்களில் கிள்ளானில் அமைந்துள்ள சிடிசி உள்ளூர் கலைஞர்கள் ஸ்டூடியோவில் நடைபெறும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் இப்போட்டியில் பங்கேற்க 170 கலைஞர்கள் கலந்து கொண்டனர். இவ்வாண்டில் இந்த எண்ணிக்கையை விட இன்னும் கூடுதலான இளம் கலைஞர்கள் போட்டியில் பங்கேற்பார்கள் என தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் கூறினார்.
இறுதிச் சுற்று வரும் 27.10.2024 இல் புக்கிட் ஜாலில் ஸ்டேடியத்தில் நடைபெறும். அன்றைய நிகழ்ச்சியில், நடுவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும் 10 கலைஞர்களுக்கு மொத்தப் பரிசுத் தொகையான 15 ஆயிரம் ரிங்கிட் பகிர்ந்தளிப்பதோடு வெற்றியாளர்களைக் கௌரவிக்க நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் சிறப்பு பிரமுகர்கள், ரசிகர்கள் முன்னிலையில் மேடையில் அவர்களுக்கு பரிசுக் கோப்பை மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப் படுவர் என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *