பிறவிப் புண்ணியர்!

top-news
FREE WEBSITE AD

பிறவிப் புண்ணியர்!

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.
– (
வெண்பா – 7 )

பழகப்பழக பழக்கம் வந்துவிடும். ஆனால் பிறவிக்குணத்தை மாற்ற முடியாது. வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும் என்கிறது இந்த வெண்பா.

அப்படி மரபின் வழி  இவை அனைத்தும் பெற்று, உயிர் நேயத்தோடு இன்று பலரின் வெளிச்சமாய் ஒளிர்பவர் ஓம்ஸ் பா. தியாகராஜன் அவர்கள். நம் இனத்தின் மதிப்பு மிகு அடையாளம் அவர்.

நம் இந்திய சமுதாயத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் நன்கு அறிவார்கள். பொதுவெளியில் ஒரு சமூகச் சேவகராக அவ்வப்போது வரும் செய்திகளின் வழி பலர்  தெரிந்திருக்கக்கூடும்.

ஆனால், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மனிதருக்கு ஆறுதலாய், ஏதோ ஒரு குடும்பத்திற்கு வெளிச்சமாய், ஏதோ ஒரு பள்ளிக்கோ அல்லது ஆலயத்திற்கோ செவி சாய்ப்பவராய் அன்றாடம் கருணையைச் சுரந்துகொண்டிருக்கிறார்.

அவர் அலுவலகத்திலும் சரி, இல்லத்திலும் சரி அடிக்கடி ஏதோ ஒரு நம்பிக்கையுடன் நுழையும் எண்ணற்ற மனங்களின் நன்றிப் பெருக்கை, ஆனந்தக் கண்ணீரை, நெகிழ்ந்து உருகி அவரின் கருணையை மெச்சும் உன்னதத்தைக் காணும் பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருவன் என்பதால் இதைச் சொல்ல எனக்கு உரிமையும் இருக்கிறது.

நியாயமான கோரிக்கையுடன் வரும் எந்த விண்ணப்பமும் இங்கே செவிசாய்க்கப்படுகிறது. அவர் செய்த சேவைகளின் பட்டியலை வெளியிட்டால் அவருக்கே அது மலைப்பாகத்தான் இருக்கும். ஆனால், எத்தனையோ செய்திகளில் இவ்வளவு பெரிய சேவையாக இருக்கிறதே நான் அதைப் பிரசுரிக்கலாமா என அவரிடம் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் வேண்டாம் என்று செல்லக் கோபத்தோடு  அவர் அதை மறுத்திருக்கிறார்.

அவருடன் அதிகம் பயணிப்பவன் என்பதால், அவரின் சேவைகளை மற்றவர் சொல்லிக் கேட்கையில் மனம் நெகிழ்கிறேன்.  

ஒரு நாள் அவருடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன்... திடீரென  அவரது கார் ஒரு பள்ளி வளாகத்திற்குள் நுழைகிறது. ஷா ஆலம் பகுதிக்கு உட்பட்ட ஓர் இடம். குறுகலான பாதையைக் கொண்ட ஒரு தமிழ்ப்பள்ளி அது. எனக்கு எந்த விவரமும் தெரியாது. அது விடுமுறை நாள். பள்ளியில் புதிதாக மண்டபம் கட்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஐயா காரை விட்டு இறங்கினார்... விறு விறுவென நடந்தார், உள்ளே வேலை செய்துகொண்டிருப்பவர்களிடம் வேலை குறித்துக் கேட்டறிகிறார்.

ஓர் இடத்தைப் பார்வையிடுகிறார்.  மாணவர்களின் நலனை மனதில் நிறுத்தி, இது குழந்தைகள் நடமாடும் போது பாதிப்பை ஏற்படுத்தும், இப்படிச் செய்யாதீர்கள் உடனே மாற்றி அமைத்துவிடுங்கள்  என்று அங்கு வேலை செய்கிறவர்களிடம் கூறுகிறார். பின்னர் பெரிய பெரிய குழாய்களை எடுத்துப் பார்த்து அதன் தரத்தை உறுதி செய்கிறார். நான் வியந்து பார்க்கிறேன். மிகப் பிரமாண்டமாய் அங்கே ஒரு மண்டபம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இச்சேவை அப்பள்ளியைத் தவிர நிச்சயம் எவருக்கும் தெரியப்போவதில்லை. அதை ஐயாவும் விரும்புவதில்லை. இப்படி எண்ணற்றச் சம்பவங்களில் அவருடன் பயணிக்கிறேன்... எல்லாவற்றிலும் அவரின் சேவையே நம்மை ஆட்கொள்கிறது.

நம் சமூகம் என்றில்லாமல் மனிதநேயம் பாராது எல்லாத் தரப்பிற்கும் தொடர்கிறது இவரது உதவி. தமிழ் மலாய் பள்ளிகள் என்று இவர் கட்டிக்கொடுத்துள்ள பள்ளி மண்டபங்கள் மட்டுமே 18 என்கிறது எனக்கு வந்த செய்தி.

ஏன் இப்படி பரந்து பரந்து மக்களுக்காகப் பாடு படவேண்டும்? சொந்தமாய் உழைத்து, கஷ்டப்பட்டு உழைப்பால் உய்ரந்தவர். பணத்தின் அருமை அவருக்குத் தெரியும். இருந்தாலும் தன் உழைப்பின் பெரும்பகுதியை ஏன் இப்படி அள்ளி இறைக்க வேண்டும்?

எத்தனையோ அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை ஆடம்பரமாய், உல்லாசமாய் அனுபவித்துக் கழிக்கிறார்கள். இவர் மட்டும் ஏன் மக்களோடு மக்களாய் அமர்ந்து தேநீர் சாப்பிட்டுக்கொண்டு இயல்பாய் வாழ்வைக் கழிக்க வேண்டும். அதுதான் பிறவியின் அற்புதம்.

அதைத்தான் மேற்கண்ட வெண்பா சொல்கிறது. பிறவியிலேயே இந்த இரக்கக் குணம் பதிந்திருக்கும் புண்ணியம் பெற்றவர்கள்தான் இதைச் செய்ய முடியும். அவர் பிறவிப் புண்ணியர். அதனால்தான் இறையருளால் தொடர்ந்து விரிகிறது அவரது கருணை.

கல்வியில் சிறந்த விளங்கும் பிள்ளைகளுக்குத் தங்கப்பதக்கம், பல்கலைக்கழகம், பள்ளி, கல்லூரி விழாக்கள் மற்றும் ஆக்கப்பூர்வச் செயல்களுக்காகத்  தொடர்ந்து உதவும் அவரது அக்கறை என வற்றாது சுரக்கும் இந்தக் கருணையின் நாயகன்தான் நம் காலத்திற்கான தீபம்.

அவரது கருணையை அணையாமல் பாதுகாத்து, தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைக்கும் வெளிச்சமாக்குவதே நமது கடமையாக இருக்க வேண்டும்.

அந்த உன்னதருக்கு இன்று பிறந்த நாள்!

வாழ்த்தி வணங்குவோம் அவரை!

-சண்.சிவா,

OMC Pa. Thiagarajan dikenang sebagai insan berhati mulia yang sentiasa membantu masyarakat tanpa mengira kaum. Beliau berbakti dalam bidang pendidikan dan kebajikan dengan penuh kasih sayang. Sifat belas kasihan beliau lahir sejak dilahirkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *