சிலாங்கூர் டெங்கி நோயாளிகள் இறப்பு 14ஆக உயர்வு-டாக்டர் நோர்ஹயாத்தி!
- Muthu Kumar
- 03 Oct, 2024
பந்திங், அக்.3-
சுகாதார இலாகா அதிகாரிகள் கண்காணிப்பில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு மருந்து தெளிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக டெங்கி காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை மாவட்ட ரீதியில் அதிகரித்து வருகிறது என்று கோலலங்காட் மாவட்ட சுகாதார இலாகா உயர்நிலை அதிகாரி டாக்டர் நோர்ஹயாத்தி மொக்தார் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெங்கி காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் கடந்த 29.9.2024 இல் சுகாதார அதிகாரிகள் குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையில் அதன் எண்ணிக்கை 17 ஆக உயர்வு கண்டுள்ளது வருத்தம் அளிக்கும் தகவலாக உள்ளது என்று அவர் கூறினார்.
தாமான் சிஜங்காங் ஜெயா, பங்சாபுரி சௌஜானா ஆகிய இரண்டு மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போர் மத்தியில் டெங்கி நோயாளிகள் படிப்படியாக உயரக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக அப்பகுதியில் ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு மருந்து தெளிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்டர் நோர்ஹயாத்தி தெரிவித்தார்.
குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போர் மத்தியில் சுற்றுப்புறத் தூய்மைக்கேடு மற்றும் கால்வாய்கள் அடைப்பு பிரச்சினைகள் இருப்பின் குடியிருப்பாளர்கள்,சங்கத்தின் தலைவர்கள் வட்டார மக்கள் நலன் கருதி கொத்தோங் ரோயோங் கூட்டுப் பணி நடவடிக்கைகளை அப்பகுதியில் தொடரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஜனவரி 2024 தொடங்கி இன்று வரையிலும் மருத்துவச் சுகாதார அறிக்கை படி சிலாங்கூர் மாநில ரீதியில் இதுவரை டெங்கி நோயாளிகள் இறப்பு 14ஆக உயர்வு கண்டுள்ளது என்று டாக்டர் நோர்ஹயாத்தி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *