பெரியோனே ரஹ்மானே! மலேசியாவில் மையம் கொண்ட இசைப் புயல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 28: இசைப் புயல் நேற்று மலேசியாவை மையம் கொண்டதில்  ரசிகர்கள் மத்தியில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது.  சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ரசிகர்கள் ஆரவாரத்தில் திளைத்தனர்.

இரவு 8.25 மணிக்குத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின்  இசைப் பெருவிழா நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.

Star Planet மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வின் தொடக்கத்திற்கு முன்னதாக, வெண்திரையில் தமிழின் பெருமை கூறும் பாடலை ஒளியேற்றியது சிறப்பு.

டிஜிட்டல் பிரமாண்டத்தில்  பின்னணி திரை மிரட்ட, ஆடல் கலைஞர்கள் விதவிதமான உடையலங்காரத்தில் பாடல்களுக்குத் தக்கவாறு அபிநயத்தில் அசத்த....  இசையின் துள்ளலில் பாடகர்கள் மெய்மறந்து பாட... ரசிகர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொண்டாடித் தீர்த்தனர்.

நிகழ்வின் சிறப்பு வருகையாளராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார். அவரோடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் கலந்துகொண்டார். 

பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், மனோ,  ஸ்வேதா மோகன்,  ஷக்தி ஸ்ரீ கோபாலன், சுபா வேதுலா,  நகுல் இவர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான்  புதல்வர்  ஏ.ஆர்.அமீனும் பாடல்களில் அனைவரையும் மெய்மறக்க வைத்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மானும் தனது பங்கிற்கு 'ஜெய் ஹோ' வில் தொடங்கி பல பாடல்களைப் பாடி ரசிகர்களின் உற்சாகத்தைக் குறையாமல்  பார்த்துக்கொண்டார்.

பின்னணி இசையில் இசைக்கலைஞர்கள் அத்தனை பேரும் இசையில் உருகி தாளம் தப்பாமல் நம்மை இடம்பெயராமல் பார்த்துக்கொண்டனர்.

புதிய இசைக் கருவிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கலைஞர்களுடன் இணைந்து 'போறாளே பொன்னுத்தாயி' பாடலை ஸ்வேதா மோகன் குரலில் பாட வித்தியாசமாய் இசையமைத்தது, ஆஸ்கார் நாயகனின் அடுத்தடுத்த வேகத்தை உணர வைத்தது.

பாடகர்கள் ஒவ்வொருவரும் பாடலை உருகி உருகிப் பாடி ரசிகர்களையும் உருக வைத்தனர்.

இடையில் மலேசியப் பாடகரான பிளேஸ் உடன் இணைந்து சிலோன் பாடகர் ஏ.டி.கே மற்றும் ஸ்ரீ ராஸ்கல் ஆகியோர் ராப்பில் அசத்த, அரங்கம் அதிர்ந்தது.

பெரும்பாலும் உற்சாகம் குறையாமல் இருக்க துள்ளல் பாடல்களே அதிகம் இடம்பெற்றன.  எல்லாப் பாடல்களுமே ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்ததை அவர்களின் உற்சாக ஆட்டத்தில், சத்தமிட்டுப் பாடியதில் உணர முடிந்தது.

'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் பாட அரங்கம் முழுக்க செல்போன் ஒலி அதற்குத் தகுந்தாற்போல் அசைய...  இசையின் பிரமாண்டத்தை உணர முடிந்தது.

'பெரியோனே ரஹ்மானே' பாடலை மனோ, ஸ்ரீனிவாஸ், நகுல் மூவரும் பாடியது... உண்மையில் , பெரியோனே ரஹ்மானே என ரஹ்மானைப் பாடுவது போல் இருந்தது.

அவர் பெரியோன்தான்.... இன்னல்கள் பல கடந்து இந்தியாவை ஆஸ்கார் பக்கம் திருப்பி ஆச்சயரியப்படவைத்த  ரஹ்மான் உண்மையில் பெரியோன்தான்!






ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *