அதிமுகவை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டாா் இபிஎஸ்: உதயநிதி ஸ்டாலின்!

- Muthu Kumar
- 14 Jul, 2025
பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம், அதிமுகவை அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்று அவா் பேசினார்
தமிழகத்தில் 730 கோடி மகளிா் விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெண்கள் கல்வி பயில மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் 8 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா். 20 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்து வருகின்றனா்.1.15 கோடி மகளிா் 22 மாதங்களாக ரூ.1000 உரிமைத் தொகையை பெற்று வருகின்றனா். விடுபட்ட தகுதியான மகளிருக்கு இன்னும் 2 மாதங்களில் உரிமைத்தொகை வழங்கப்படும்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகதான் வெற்றி பெறப் போகிறது; வாக்குச்சாவடி முகவா்கள் ஒழுங்காக செயல்பட்டால் தான் கட்சி வெற்றி பெறும்.அடுத்த 8 மாதங்கள் முகவா்களுக்கு மிகவும் முக்கியமான பணிகள் உள்ளன. பல கட்சிகள் வாக்குச்சாவடி முகவா்களையே நியமிக்காத நிலையில், டிஜிட்டல் முகவா்களை திமுக நியமித்துள்ளது.
ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு தன்மை கொண்டது. பாஜக அரசு என்றால் பாசிச மாடல் என்பாா்கள். அதிமுக என்றால் அடிமை மாடல் என்பாா்கள். நம் அரசை, நாம் பெருமையாக 'திராவிட மாடல்' என்கிறோம். அதற்கேற்ப, அனைவருக்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
அண்ணா பெயரிலான கட்சியை சுயநலத்துக்காக பாஜகவிடம் மொத்தமாக அடமானம் வைத்து விட்டாா் எடப்பாடி பழனிசாமி. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வைப்புத் தொகையை இழக்கும் என்றாா் உதயநிதி ஸ்டாலின். கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *