திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு!

- Muthu Kumar
- 07 Jul, 2025
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று சிறப்புடன் நடைபெற்றது.இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடு திருச்செந்தூர் முருகன் கோவில். திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வையொட்டி மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 8,000 சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்களில் 400 கும்பங்களுடன் யாகசாலை பூஜை ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. ஜூலை 6-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 10, 11-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
குடமுழுக்கு நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை பகல் வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று ஜூலை 7-ந் தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு நடத்தப்பட்டது.பின்னர் காலை 6.15 மணியளவில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா தமிழில் நடைபெற்றது. திருச்செந்தூரில் கூடியிருந்த பக்தர்களின் அரோகரா சரணகோஷங்களுக்கு இடையே இந்த குடமுழுக்கு நன்னீராட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது குடமுழுக்கு நன்னீர் தெளிக்கப்பட்டது.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற குடமுழுக்கை காண்பதற்காக பக்தர்கள் கடற்கரை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் குடமுழுக்கை காண்பதற்கு வசதியாக 70 இடங்களில் எல்இடிதிரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்திருந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தொடர்ந்து திருச்செந்தூர் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இன்றைய குடமுழுக்கு விழாவுக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 6,000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *