ஓம்ஸ் தியாகராஜன் முன்வைத்த கருத்திற்கு பொது இயக்கங்கள் பேராதரவு!
- Muthu Kumar
- 01 Oct, 2024
கோலாலம்பூர், அக்.1-
ஓம்ஸ் தியாகராஜன் முன்வைத்த வேண்டுகோளை உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம், மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை மற்றும் ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம் ஆகியவை வரவேற்கின்றன மின் சுடலைகளில் நம் சரித்திரம் எரிக்கப்படாமலிருக்க, நல்லடக்கம் செய்யும் இடங்களை அமைப்போம் என்ற ஓம்ஸ் தியாகராஜனின் கருத்தினை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம், மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை மற்றும் ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம் ஆகியவை வரவேற்கின்றன என அதன் ஒருங்கிணைப்பாளர்களான பாலமுருகன் வீராசாமி, கணேசன் சுப்ராயன், கலையரசு கலியபெருமாள் ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழர் மரபியல் வழி நல்லடக்கம் என்பது புதைத்தலே, அதையே நம் முன்னோர்கள் மூதாதையர்கள் அருளாளர்கள் ஆய்வாளர்கள் என பலரும் வலியுறுத்திச் சென்றனர்.
தமிழ்ச்சமய நிலைகளான மரபும் அகமும் புதைத்தலையே முன்வைக்கின்றன. தமது இறையாசான் வள்ளலார் பெருமான் கூட, இறந்த உடலை எரிப்பது ஒரு கொலைக்கு ஒப்பானது என்கிறார்.
மேலும் எரித்துவிட்டு ஆதனாற்று (கருமக்கிரிகை) செய்வது அர்த்தமற்றது. இறந்தவர் உடல் இயற்கைத் தன்மையில் இணைய, குறைந்தபட்சம் 16 நாட்கள் பிடிக்கும் என்பதனாலே, ஆதன் அதாவது உயிர் அமைதி பெற்று, இறைவனடி சேர வழிபாடு செய்வதே “ஆதனாற்று வழிபாடு" எனும் நாம் கடைப்பிடிக்கும் வழக்கமாகும்.
புதைத்து கல்லறை கட்ட வேண்டும் என்பது அல்ல, கல்லறையும் நம்முடையதல்ல. அது பிறமொழியினரின் தழுவல். புதைத்து நடுகல் நடுவது மட்டுமே தமிழரின் மரபு.
மண்ணில் விளைந்ததை உண்டு வளர்ந்த உடலை, மண்ணுக்கு உரமாக்குவதே தார்மீகச் செயலாகும் என்பது பெரியவர்களின் வாக்கு.இதை அறியாமல் அயலாரின் தாக்கத்தால், நமது வரலாற்றை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்.
பிற இனங்களுக்கு அரசு நிலத்தை ஒதுக்கித் தருவது போல நம்மின தேவைக்கான நிலங்களை தட்டிக் கேட்டுப் பெற வேண்டும். மேலும் புதைக்கும் அந்த இடுகாட்டையே பூங்காவைப் போல் வடிவமைத்து வழிநடத்த வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை மற்றும் ஈப்போ வள்ளலார் அன்பு நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் கேட்டுக் கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *