தமிழக கோயில்களில் பிரேக் தரிசனம்-பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலையில் விரைவில் அமல்!

top-news
FREE WEBSITE AD

திருப்பதியை போன்று, தமிழக கோயில்களில் விரைவில் பிரேக் தரிசனம் (Break Darshan) நடைமுறை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.குறிப்பாக, பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை கோயில்களில் விரைவில் பிரேக் தரிசனம் நடைமுறை வர உள்ளதாக தெரிகிறது. இதனால், பக்தர்களின் காத்திருப்பு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புகழ்பெற்ற கோயில்களில் பழனி பழனி தண்டாயுதபாணி, திருச்செந்தூர் முருகன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்கள் ஆகும். சமீபத்தில் தான் திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. கிட்டதட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதற்கு முன்னதாகவும், திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற விசேஷ தினங்களில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

அதே போல, பழனி தண்டாயுதபாணி கோயிலிலும் இதுபோன்று தான் இருக்கும். முருகனுக்கு உகந்த நாட்களில் எல்லாம், பக்தர்களின் வருகை அலைமோதும். இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கடந்த சில ஆண்டுகளாகவே பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்னதாக, பெரிய அளவில் திருவண்ணாமலை கோயிலில் கூட்டம் இருக்காது. ஆனால், சில ஆண்டுகளாகவே நாள்தோறும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், எப்போது அக்கோயிலில் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, சிவராத்திரி, கிரிவலம், கார்த்திகை திபம் போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதனால், தரிசனம் செய்வதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க, இந்து சமய அறநிலையத்துறை பிரேக் தரிசன முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. முதற்கட்டமாக பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர் கோயில்களில் பிரேக் தரிசன நடைமுறையை அறிநிலையத்துறை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பக்தர்களின் தரிசன நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேக் தரிசன் அமல்படுத்தப்படும் பட்சத்தில், பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய முடியும். அதோடு, பிரேக் தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்றவைகளும் வழங்கப்படும்.  திருப்பதி எழுமலையான் கோயிலில் பிரேக் தரிசனம் இருப்பது போன்று இந்த மூன்று கோயில்களில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக, ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட பிற முக்கிய கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *