8 வது ஹிவூட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்க பிரதமர் அன்வார் வருகை!

top-news
FREE WEBSITE AD

சுங்கை சிப்புட், அக்.4-

நகரத்தின் மத்தியில் லிந்தாங் தொகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் கம்பீரமான நிலையில் 8 ஆவது ஹிவூட் தோட்ட புதிய தமிழ்ப்பள்ளி தோற்றம் பெற்றுள்ளது. தற்போது 101 மாணவர்கள் கல்விக் கற்கும் நிலையில் தலைமையாசிரியருடன் மொத்தம் 15 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

மாணவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் கல்வி சார்ந்த எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய இப்பள்ளியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பதற்கு வரும் 6.10.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை தரவுள்ளார்.

இது தொடர்பாக, சுங்கை சிப்புட் தொகுதி பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் மக்கள் சேவை மையத்தின் சார்பில் தமிழ் மலருக்கு வழங்கிய செய்தியில் கடந்த காலத்தில் தாய்மொழி மீது அதீத பற்றுடைய ஆர்வலர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு புதிய தமிழ்ப்பள்ளியின் அவசியத்தை வலியுறுத்தி அன்றைய மாநில அரசு, மத்திய கல்வி அமைச்சு மற்றும் பிரதமர் துறையின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர். கடந்த 22.1.2012 அன்றைய தினத்தில் இது குறித்த செய்தி அறிவிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இப்பள்ளி மேம்பாட்டு பணி நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஏதோவொரு காரணத்தினால் மேம்பாட்டு பணி தடைப்பட்டது. இருப்பினும். 5 ஆண்டு காலம் தாமதம் ஆனாலும், இன்று சமுதாயம் தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் பள்ளியாகக் காட்சியளிக்கிறது.

இந்த சூழ்நிலையில், பிரதமரின் வருகையால் சுங்கை சிப்புட் நகரமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அந்நிலையில், மண்ணின் மைந்தர்கள் அனைவரும் தவறாமல் அதிகாரப்பூர்வ நிகழ்வில் கலந்து கொள்வதுடன், நம் பிரதமரின் பேருரையை கேட்பதற்கு தவறாமல் வருகையளிக்கும்படி மக்கள் சேவை மையத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம் என்றும் கேசவன் தெரிவித்துள்ளார்.




ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *