கடலூரில் பள்ளி வேன் மீது மோதிய ரயில்! : பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு- ஒரே குடும்பத்தில் இருவர் பலி!

- Muthu Kumar
- 08 Jul, 2025
தமிழ்நாடு, ஜூலை 8: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, அவரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை.8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. இதில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது.
இதில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்டுநர் சங்கர்(47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் ( 15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்துக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த விபத்து கடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் -மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஆலப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது போல இந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அந்ததந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் விபத்து ஏற்பட்டது என்றும், ரயில்வே கேட்டை மூடாமல் கேட்கீப்பர் தூங்கி விட்டதால் பள்ளி வேன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது என்றும் பொதுமக்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டினர்.
செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கேட்கீப்பரான உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மாவின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் பங்கஜ் சர்மா (32) பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து பங்கஜ் சர்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *