KL - குழியில் விழுந்த இந்திய மாதுவைத் தேடும் பணி தொடர்கிறது.. இரண்டாவது நாளாகத் தொடரும் சோகம்...

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர் உலக சுற்றுலாப் பிரியர்கள் அதிகம் வந்துபோகும் மலேசியாவின் வசீகர நகரம். 

பரபரப்பான அந்த நகரின் முக்கிய பகுதியான மஸ்ஜிட் இந்தியா சாலையில்தான் இப்போது, ஒட்டுமொத்த மலேசிய மக்களின் கண்களும் பிரார்த்தனைகளும் குவிந்திருக்கின்றன.

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது மாது  உற்சாகத்தோடு நகரை ரசித்தபடியே நகர.... அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் ஒரு சிறு குழி தம்மை உள்வாங்கும் என்று... ஆனால் நிகழ்ந்தது....

நடந்துகொண்டிருந்தவர், திடீரென விசாலமான குழியின் ஆழத்திற்குள் மறைய....

உடன் வந்தவர்கள் உறைந்து போயினர்.... செய்வதறியாது கூக்குரலிட்டு பதறித் துடித்தனர்.

ஆனால், உள்ளிழுத்த மண்ணுக்குள் இருந்து ஒரு சத்தமும் இல்லை.

நம்மோடு சிரித்து வந்தவர், இதோ இந்த மண்ணுக்குள்... என்ற பதபதைப்பே அந்நிய தேசத்தில் அவர்களை நொறுக்கிப் போட்டது.

ஆசையுடன் நடந்து கொண்டிருந்த விஜயலட்சுமி கண்ணிமைக்கும் நேரத்தில்  கணப்பொழுதில் விழுந்தார். 

அப்படி அவர் விழாமல் இருந்திருந்தால் அதன் அருகில் அமர்ந்த நபரோ, இல்லை அவருக்கு இடப்பக்கம் நடக்கும் ஒரு தம்பதியினரில் ஒருவரோ விழுந்திருப்பார்கள். 

தகவல் அறிந்த கோலாலம்பூர நகராண்மைக் கழகம், தீயணைப்புத்துறை காவல்துறை உட்பட பல பிரிவினர் நேற்று காலை முதல் இப்போது வரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்வாரி எந்திரங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இதுவரைக்கும் சாலையின்  6 குழிகளில் தேடுதல் நடவடடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி இரண்டு குழிகளில் சோதனை நிறைவுற்றுள்ளது. இதுவரை அவர் தென்படவில்லை.

சுமார் 7 கிலோமீட்டருக்கு நீளும் இந்த பாதாள சாக்கடை பாதையில் அனைத்து முகத்துவாரப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அப்பெண்ணின் கணவர் மற்றும் மகன் செய்வதறியாது அதே கதியாய் கிடக்கின்றனர். 

ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.42  மணிக்கு குழியில் விழுந்த விஜயலட்சுமியை மலேசிய தீயணைப்பு வீரர்களும் காவல்துறை அதிகாரிகளும் மீட்டெடுக்கும் பணியில் மஸ்ஜித் இந்தியா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளானர்.

மழையின் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும்,   குழிக்குள் விழுந்தது ஓர் உயிர் அல்லவா என்ற நோக்கத்தில் இரவு பகல் பாராது தங்கள் பணியை முழு வீச்சில் செய்து வருகின்றனர் மீட்புப்படையினர்.

விஜயலட்சுமியை மீட்டெடுக்கும் பணிகளுக்கு இடையில்  பல சவால்கள் இருந்தாலும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவரின் நோக்கமும் விஜயலட்சுமியை பத்திரமாக மீட்டெடுக்கப்படுவது தான்.  

விஜயலட்சுமி விழுந்த குழியின் வழி நீர் போய் சென்றடையும் பந்தாய் டாலாம் ஆற்றின் அருகிலேயும் மீட்புப் பணியில்பாதுகாப்பு வீரர்கள் தங்கள் பணியை மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே தனது தாயை இப்படி ஒரு சூழலில் விட்டு விட்டோமே என்ற உருக்கத்தில் அழுது புலம்பிய விஜயலட்சுமியின் மகன் அழும் காணொளி காண்போரின் கண்களை கலங்க வைக்கிறது. 

மிக விரைவில் விஜயலட்சுமியை நமது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டெடுப்பார்கள் என்றும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திப்போம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *