ஓமனில் தொடங்கியது அமெரிக்க -ஈரான் அணுசக்தி பேச்சு!

top-news
FREE WEBSITE AD

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமானில் சனிக்கிழமை தொடங்கியது.அதன் ஒரு பகுதியாக, இந்தப் பேச்சுவாா்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான மத்தியஸ்தில் ஈடுபட்டுவரும் ஓமானின் வெளியுறவுத் துறை அமைச்சா் பாதா் அல்-புசையீதியை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி சந்தித்துப் பேசினாா்.

முன்னதாக, இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து ஆரக்சி வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவுடனான மறைமுகப் பேச்சுவாா்த்தையின் முக்கிய நோக்கம், சரிசமமான அந்தஸ்துடன் கூடிய, நியாயமான ஒப்பந்தம் ஒன்றை அந்த நாட்டுடன் ஏற்படுத்திக்கொள்வதுதான். அவா்களும் அதே நோக்கத்தைக் கொண்டிருந்தால் இதில் ஆரம்பகட்ட புரிதல் ஏற்பட்டு, நேரடி பேச்சுவாா்த்தையை நோக்கி நகர முடியும். தற்போது இந்த மறைமுகப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கும் ஈரான் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவா்கள்; அணுசக்தி தொடா்பான பேச்சுவாா்த்தைகளில் நல்ல அனுபவம் பெற்றவா்கள் என்றாா் அவா்.

பராக் ஒபாமா ஆட்சிக் காலத்துக்குப் பிறகு அமெரிக்காவும் ஈரானும் இதுவரை நேரடிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவில்லை. மேலும், கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு தரப்பினரும் இப்போதுதான் முதல்முறையாக மறைமுகப் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகத்தான் ஈரான் தங்களது அணுசக்தி திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறது என்ற அச்சம் எழுந்ததால் அந்த நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்டது. அதையடுத்து, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்தச் சூழலில், ஒபாமா ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ள ஒப்பந்தத்தில் இருந்து அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த டிரம்ப் வெளியேறினாா். மேலும், நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அவா் ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.

இதைக் கண்டிக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறியது. தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டம் இல்லை என்று அந்த நாடு உறுதியாகக் கூறினாலும், அணுசக்தி எரிபொருளான யுரேனியத்தை தேவைக்கு அதிகமாக 60 சதவீதம் வரை அந்த நாடு செறிவூட்டி, ஒப்பந்த வரம்புக்கும் அதிகமாக இருப்பு வைத்துள்ளது (இன்னும் 30 சதவீதம் யுரேனியத்தை ஈரான் செறிவூட்டினால் அதைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்க முடியும்).

இந்தச் சூழலில், அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டிரம்ப், தங்களுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தாா்.

இந்தச் சூழலில், அணுசக்தி விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா்.அதன் தொடா்ச்சியாக, ஓமான் தலைநகா் மஸ்காட்டில் அந்தப் பேச்சுவாா்த்தை தற்போது தொடங்கியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *