திருப்பதி காணிக்கை பணம் எண்ணும் பணியில் 100 கோடி ரூபாய் திருட்டு- கோவிந்தா கோவிந்தா!
- Muthu Kumar
- 02 Aug, 2024
திருப்பதி ஏழுமலையான் கோயில் இந்தியாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட கோயிலாக இருந்து வருகிறது. இதன் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இங்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை நாளொன்றுக்கு 4-5 கோடி ரூபாய் வரை இருக்கும் நிலையில், ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கிடைத்த காணிக்கையின் மதிப்பு ரூ,1,398 கோடி ஆகும்.
இந்த கோயிலில் காணிக்கை எண்ணும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஒருவர் ரூ.100 கோடி அளவுக்கு சுருட்டியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் திருமலை பெரிய ஜீயர் மடத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் ரவிக்குமாரை கடந்த 20 ஆண்டுகளாக திருப்பதி உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணியாளர்களில் ஒருவராக திருப்பதி தேவஸ்தானம் நியமித்தது.
கடந்த சில ஆண்டுகளாக அவரது நடவடிக்கையை கண்காணித்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவர் மலக்குடல் மூலம் வெளிநாட்டு கரன்சிகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், திருடிய பணத்தின் மூலம் ரூ.100 கோடி அளவுக்கு வீடு, நிலம் மற்றும் தோட்டம் ஆகியவற்றை வாங்கியதை ஒப்புக் கொண்டார்.
இந்த தகவல் வெளியில் தெரிந்தால் பக்தர்களின் நம்பிக்கை கெட்டுவிடும் என கருதிய தேவஸ்தான நிர்வாகம், லோக் அதாலத்திற்கு இந்த விசயத்தை கொண்டு சென்றது. அப்போது திருடிய பணத்தில் வாங்கிய பாதி சொத்துகளை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக எழுதிக் கொடுப்பதுபோல எழுதி வாங்கியுள்ளனர். இதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அண்மையில் ஆந்திர மேல்சபை உறுப்பினர் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ஆந்திர சட்ட மேல்சபையில் இந்த முறைகேடு குறித்து அமைச்சர் பேசியதை அடுத்து, இத்தனை காலமாக வெளியில் தெரியாமல் இருந்த இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *