கும்பமேளா நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு!

- Muthu Kumar
- 29 Jan, 2025
மௌனி அமாவாசையை முன்னிட்டு இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ஆம் மகா கும்பமேளா தொடங்கியது. அங்கு இருக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.நாடு முழுவதிலும் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர். பிரயாக்ராஜ் ரயில் நிலையம் அருகே மட்டும் 7 ரயில் நிலையங்கள் உள்ளன. இதனால் வரும் ரயில்களில் எல்லாம் கூட்டம் குவிந்து வருகிறது.
பேருந்து வசதிகளும் அடிக்கடி இருக்கின்றன. சிவில் லைன்ஸ், ஜீரோ சாலை ஆகிய இடங்களில் பேருந்து முனையங்கள் அமைந்துள்ளன. வாகனங்கள் நிறுத்த மட்டுமே 30 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் 5 லட்சம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் உள்ள விமான நிலையத்துக்கு 100 க்கும் மேற்பட்ட சிறப்பு விமான சேவைகளும் இயங்குகின்றன.
16வது நாளான நேற்று மட்டும் மகா கும்பமேளாவில் 3.90 கோடி பேர் புனித நீராடினர். இதுவரை 17.5 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மௌனி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மவுனி அமாவாசை என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள கூடார நகரம், கோபுர நகரத்தில் ஒரே நேரத்தில் 10 லட்சம் பேரை தங்க வைக்க முடியும். அவையும் நிரம்பி உள்ளன.கூட்ட நெரிசலால் பிரயாக்ராஜில் 12 கி.மீ தொலைவுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், விமான நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவை மக்கள் நடந்தே கடக்க வேண்டும்.
24 மணிநேரமும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி, ஜனவரி, 28,29,30 ஆகிய நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *