15வது உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லிம் பிரமுகர் பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 9-

உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லிம் பிரமுகர்களில் பதினைந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம். ஜோர்டான் நாட்டைத் தளமாகக் கொண்டு செயல்படும் அரச இஸ்லாமிய வியூக ஆய்வியல் மையம் 2025ஆம் ஆண்டுக்கான தனது பதிப்பில்"உலகின் 500 செல்வாக்குமிக்க முஸ்லிம்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வின் பிரசுரத்தில் "மன்னர்கள்,அரசியல்வாதிகள்” எனும் பட்டியலில் அன்வாருக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.அரசியல் தலைவர் மற்றும் பிரதமர் எனும் வகையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக துடிப்பான அரசியல் பயணத்தை மேற்கொண்டுவரும் ஒரு மிதமான தலைவர் என்றும் அன்வாரை அந்த மையம் பாராட்டியுள்ளது. 1960ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மலாயாப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது அன்வார் செய்த அரசியல் பிரவேசம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவின் அழைப்பின் பேரில் அம்னோவில் சேர்ந்தது, அதன் பிறகு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, அதன் பின்னர் அவர் எதிர்கொண்ட பல சோதனைகளைக் கடந்து பிரதமர் பதவிக்கு வந்தது போன்றவற்றை அம்மையம் சுட்டிக் காட்டியுள்ளது.

செல்வாக்குமிக்க முஸ்லிம் பிரமுகர்களின் பட்டியலில் அன்வாருக்கு ஒரு இடத்துக்கு மேலே அதாவது பதினான்காவது இடத்தில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது சல்மான் உள்ளார். இந்தோனேசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியாந்தோ, அதிபர் ஜோக்கோ விடோடோ, வங்காளதேசத்தின் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், லண்டன் மேயர் சாதிக் கான் ஆகியோரும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் ஜோர்டான் மன்னர் இரண்டாவது அப்துல்லா ஆவார். இரண்டாவது இடத்தில் ஏமன் நாட்டு கல்விமான் ஷேக் அல்- ஹபீப் உமர் ஹஃபீஸ், மூன்றாவது இடத்தில் கத்தார் மன்னர் தாமிம் பின் ஹமாட் அல்-தானி ஆகியோர் உள்ளனர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *