317 கிலோ கொண்ட வாலிபர் இங்கிலாந்து நாட்டில் மரணம்
- Muthu Kumar
- 06 May, 2024
இங்கிலாந்து நாட்டின் மிகவும் உடல் பருமன் கொண்ட நபர் தனது 34வது வயதில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது மரணத்தின் காரணம் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் ஹாம்ப்ஷயர் பகுதியில் வசித்து வந்த Jason Holton என்பவரே தமது 34வது பிறந்தநாளுக்கும் ஒரு வாரம் முன்னர் ராயல் சர்ரே மாவட்ட மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
இறக்கும் போது அவரது உடல் எடை 317.51 கிலோ இருந்துள்ளது. உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் பருமனால் இறந்தார் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேசனின் தாயார் 55 வயதான லீசா தெரிவிக்கையில், மருத்துவர்கள் அவரை மீண்டும் காப்பாற்ற முடியும் என்று நம்பினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போனது என்றார்.
சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சையில் இருந்துள்ளார் என்றும், இறுதியில் அவரது சிறுநீரகம் செயலிழந்தது என்றும் லீசா குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் ஜேசன் மரணமடையலாம் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 27ம் திகதி ஜேசன் மரணமடைந்ததாக லீசா தெரிவித்துள்ளார். உடற்கூறு ஆய்வில், உடல் உறுப்பு செயலிழப்பு மற்றும் உடல் பருமனால் இறந்தார் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தந்தையின் திடீர் மரணத்திற்கு பின்னர் ஜேசன் அதிகமாக உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளார். 2015ல் பிரித்தானியாவிலேயே உடல் பருமனான நபராக ஜேசன் மாறியுள்ளார்.
2020ல் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதும், கிரேன் மூலமாக அவரை குடியிருப்பில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றினர். மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கும் சிகிச்சையும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை லண்டன் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி, வரிக்குதிரைகள் போன்ற மிருகங்களுக்கு எக்ஸ்ரே எடுக்கும் கருவியால் ஆய்வு செய்ய முடிவானது.
ஆனால் இறுதியில் அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. அதிக செலவு காரணமாகவும், ஜேசனின் நிலை தொடர்பில் மருத்துவர்களுக்கு கவலை இருந்ததாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, ஜேசனால் இனி நடக்க முடியாது என்ற சூழல் உருவானதும், ஹாம்ப்ஷயர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் மாற்றப்பட்டு, படுக்கையிலேயே மரணம் வரையில் வசித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *